×

அந்த ஊருக்கு மனுஷன் போவானா? சொந்த நாட்டிற்கே செல்ல மறுத்த அமெரிக்கர்கள்

புதுடெல்லி: அமெரிக்க அரசு சிறப்பு விமானம் அனுப்பியும், இந்தியாவில் சிக்கியிருக்கும் பல அமெரிக்கர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர். இதற்கு காரணம், அமெரிக்காவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஊரடங்கு மூலம் அதன் பரவல் பெரிய அளவில் இல்லாததுதான் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அனைத்து வகை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு விமான சேவைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பல அமெரிக்கர்கள் மற்றும் இங்கு பணியாற்றும் அமெரிக்கர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் இங்கேயே சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு விமானங்களை இயக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதன்படி நேற்று இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால், அங்கு 5.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இன்னும் 15 நாட்களில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தொடும் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதனால் அமெரிக்கர்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்களில் பலர், சிறப்பு விமானம் இயக்கப்பட்டபோதும் சொந்த ஊருக்கு செல்ல மறுத்துவிட்டனர். தாங்கள் இந்தியாவிலேயே இருக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல்
இந்தியாவில் சிக்கி உள்ள வௌிநாட்டினர்,விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு விசா முடிந்திருந்தால், அவை வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் விசா காலாவதியான பல வெளிநாட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அமீரகத்திலிருந்து தங்கள் பிரஜைகளை அழைத்துக்கொள்ள அரசு வலியுறுத்தல்
சொந்த  நாட்டிற்கு திரும்பி  செல்ல விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து கொள்ளாத நாடுகளை சேர்ந்தவர்களை எதிர்க்காலத்தில் வேலைக்கு அமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு மனிதவளம் மற்றும் அமீரகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தும் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர்.  அவர்களுக்கு வசிக்கவும், உணவுக்கும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்வது அந்தந்த நாடுகளின் கடமையாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பெரும்பாலான நாடுகளில் இருந்து முறையான பதில் எதுவும் வரவில்லை. இதனால் எதிர்காலத்தில் அந்த நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை அமீரகத்தில் வேலைக்கு அமர்த்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் சொந்த நாட்டு மக்களை விட வெளிநாட்டினர் அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Americans ,town ,home , US Government, Americans, India, Corona
× RELATED பொறுப்பேற்பு