×

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தள்ளி வைப்பு?

மும்பை: கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்பு அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டிகள் மீண்டும்  தள்ளி வைக்கும் அறிவிப்பு இன்று வெளியாகலாம். இந்தியன் பிரிமீயர் லீக்(ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலமான உள்ளூர் போட்டி. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) டி20 போட்டியின் வணிகரீதியான அங்கீகாரம் பெற்ற வடிவம்தான் ஐபிஎல். கபில்தேவ் உள்ளிட்டவர்கள் நடத்திய ஐசிஎல் போட்டிக்கு பிசிசிஐ அங்கீகாரம் தரவில்லை. ஆனால் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துதான் 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ தொடங்கியது.

ஐபிஎல் தொடருக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.  கடந்த 12 ஆண்டுகளாக தடையின்றி நடந்து வரும் ஐபிஎல் போட்டி ஒரே ஒருமுறைதான் இந்தியாவுக்கு வெளியில் நடந்தது. அது 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக ஐபிஎல் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்றது. எனினும் தடையில்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டியின் 13வது தொடரை  திட்டமிட்டபடி இந்த ஆண்டு தொடங்க முடியவில்லை. கொரோனா பீதி காரணமாக மார்ச் 29ம் தேதி தொடங்குவதற்காக இருந்த ஐபிஎல் போட்டி ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. அதற்கு ஏற்ப நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வர கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதே நிலைதான் உலகம் முழுவதும் என்பதால், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இந்தியா வர வாய்ப்பில்லை.

இந்த பிரச்னை எல்லாம் ஏப்.15ம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்று பிசிசிஐ எதிர்பார்த்தது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டுதான் உள்ளது.எனவே ஐபிஎல் போட்டி மீண்டும் தள்ளி வைக்கப்படும் நிலையே தொடர்கிறது. நேற்று மாலை வரை பிசிசிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. காரணம் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா எனபதை மத்திய அரசும் நேற்று மாலை வரை  அறிவிக்கவில்லை. ஆனால் ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இதில் ஒரிசைவை தவிர மற்ற மாநிலங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மாநிலங்கள்.  மற்ற மாநிலங்களுங்களும் மத்திய அரசு அறிவிக்கும் என்று காத்திருக்கின்றன. இந்நிலையில் பிரதமர் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம். அதற்கு ஏற்ப ஐபிஎல் போட்டிகளும் தள்ளி வைக்கப்படுவதற்கான அறிவிப்பை பிசிசிஐயும் வெளியிடலாம். எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டித்தாலும் ஐபிஎல் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை. காரணம் அது பல்லாயிரம் கோடி வணிகம். எனவே மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்புதான் வெளியாகும்.

Tags : tournaments ,IPL ,matches , IPL matches, postponement, corona
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி