கொரோனா பணியால் பார்க்க முடியவில்லை: வருங்கால மனைவிக்கு ட்ரோனில் சாக்லெட் அனுப்பிய வாலிபர்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பணியில் ஈடுபட்டு வந்த சுகாதார பணியாளர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு ட்ரோன் மூலம் சாக்லெட் அனுப்பி உள்ளார். புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். முத்தியால்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். வரும் 29ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன், இவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இந்த திருமணத்தை பெற்றோர்கள் எளிய முறையில் நடத்த இருக்கிறார்கள். சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் கணேஷ் கடந்த 3 நாட்களாக இரவு பணியில் இருந்ததால், தீபிகாவை பார்க்க முடியவில்லை, மேலும் பேச முடியாமல் இருந்துள்ளார்.

வருங்கால மனைவிக்கும் திடீர் சர்பரைஸ் கொடுக்கலாம் என யோசித்த, கணேஷ் தனது நண்பர் ரகுபதியின் உதவியை நாடினார். அவரது ஸ்டுடியோவில் இருந்து டிரோன் கேமராவை வாங்கி பயிற்சி எடுத்து கொண்டார். நேற்று அதில் சாக்லெட்டை பாதுகாப்பாக பார்சல் செய்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது வருங்கால மனைவி தீபிகாவுக்கு பரிசாக அனுப்பினார். மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் தான் சமூக விலகல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், தனது வருங்கால மனைவியை நேரில் சந்திக்காமல் ட்ரோன் மூலம் சாக்லேட் வழங்கியதாகவும் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>