×

மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா: இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை ஏப்ரல் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் விசா ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டவர்கள் தாயகம் செல்ல முடியாததால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 308 பேர்  உயிரிழந்த நிலையில், 857 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி ஊரடங்கை இந்தியாவில் அமல்படுத்தினார். இந்த ஊரடங்கின் ஒரு பகுதியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருந்து பொருட்கள் மற்றும் சரக்கு விமானங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக மட்டுமே தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கட் பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அவர்களது பெயரில்  1 வருடத்துக்கு டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

வேறு பெயரிலோ, பண மாகவோ மாற்ற முடியாது என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் தேசிய ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இருப்பினும், வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருவதால், ஊரடங்கை மேலும் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம் பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் நாளை 10 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : government ,India ,expatriates ,Central , Corona, India, Visa, Central Government
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...