×

தனியார் மருத்துவமனையில் பணியாற்றியவர் நெல்லூரில் கொரோனாவுக்கு டாக்டர் பலி: சிகிச்சை அளிக்க முன்வராத அரசு மருத்துவர்கள்

ஸ்ரீகாளஹஸ்தி: நெல்லூரில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு டாக்டர் லட்சுமி நாராயணரெட்டி. இவருக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்பு உடல்நிலை லேசாக பாதிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால், அவர் உடனடி  சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திடீரென அவரது உடல்நிலை மோசமானது. இதனால், அவர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் அமைக்கக்கூட மருத்துவர்கள் யாரும் முன்வராததால் டாக்டர் லட்சுமி நாராயணாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் கடந்த 6ம் தேதி அவரை நெல்லூரிலிருந்து சென்னைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று டாக்டர் லட்சுமி நாராயணரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நெல்லூருக்கு கொண்டு வர முடியாததால் சென்னையிலேயே இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 6 பேர் பலியாகி உள்ளனர். தற்போது டாக்டர் ஒருவரும் பலியாகி உள்ளதால் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மக்களுக்கு தலா 3 முகக்கவசம்: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தடேப்பள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் பேசியதாவது: மாநிலத்தில் ஒரு லட்சத்து 3,986 சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ள நிலையில் தற்போது 7,250 தொழிற்சாலைகள் மட்டும் இயங்கி வருகிறது. இதனால் மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மை துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்கு சமூக விலகலை கடைபிடிப்பதோடு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். எனவே, மாநிலம் முழுவதும் 5 கோடியே 30 லட்சம் பொதுமக்களுக்கு தலா 3 முகக்கவசம் என 16 கோடி முகக்கவசங்களை விரைவில் அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்றார்

Tags : Doctor ,Coroner ,doctors ,Government ,Nellore , Private Hospital, Nellore, Corona, Dr Pali, Government Doctors
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்