×

81 கோடி பயனாளிகளுக்கு வழங்கலாம் 9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியம் கையிருப்பு: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

புதுடெல்லி: ‘பொது விநியோக திட்டத்தில் 81 கோடி பயனாளிகளுக்கு 9 மாதங்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு கையிருப்பு வைத்துள்ளது,’ என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.  கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மத்திய அரசு முடக்கத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்து அதிகளவில் உணவுப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்கின்றனர். இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பரவி வரும் இந்த சிக்கலான நேரத்தில், ஏழை மக்களுக்கு சரியான நேரத்தில் உணவு தானியங்கள் சப்ளை செய்வது முக்கியம்.

அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 10ம் தேதி வரை அரசு உணவு கிடங்குகளில் இருந்து 299.45 லட்சம் மெட்ரிக் டன் அரசி, 235.33 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை என மொத்தம் 534.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொது விநியாகத் திட்டம் மூலம் மாதம் ஒன்றுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் சப்ளை செய்யப்படுகிறது. சமீபத்தில் கூட ஒரே நாளில் ரயில்கள் மூலம் 20.19 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது சாதனை. இது தவிர பருப்புகளும் குறிப்பிட்ட அளவில் விநியோகிக்கப்படுகின்றன. உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை இல்லை.

பொது விநியோக திட்டத்தில் 81 கோடி பயனாளிகளுக்கு 9 மாதங்களுக்கு அளிக்க வேண்டிய உணவு தானியங்களை மத்திய அரசு கையிருப்பு வைத்துள்ளது
குறுவை சாகுபடியும் தற்போது நன்றாக உள்ளது. அதனால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மோதுமான கையிருப்பை நாம் பெறுவோம். இந்த முடக்க காலத்தில் உணவு சப்ளையில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால், இது பேரழிவை ஏற்படுத்தி இருக்கும். உணவு தானிய சப்ளை எல்லாம் நல்லபடியாக சென்றது மிகப் பெரிய திருப்தி. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Food Grain Reserve, Ramvilas Baswan, Corona
× RELATED டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு...