×

காலரா பரவியபோது மாஸ்க், கையுறை அணியாமல் வங்கதேசத்தில் சிகிச்சை அளித்தேன்: நினைவு கூர்ந்தார் தஸ்லிமா நஸ்‌ரீன்

புதுடெல்லி: வங்கதேசத்தில் தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் தஸ்லிமா நஸ்‌ரீன். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இவர் ‘லஜ்ஜா-அவமானம்’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி கடந்த 1993ம் ஆண்டு வெளியிட்டார். இதில் பாபர் மசூதி இடிப்புக்குப்பின், வங்கதேசத்தில் நடந்த இந்து எதிர்ப்பு போராட்டத்தால் நடந்த சம்பவங்களை விமர்சித்திருந்தார்.  இதற்கு வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பு உருவானதால், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து, புத்தகங்கள் எழுதி வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, அவருக்கு தனது டாக்டர் பணியை ஞாபகப்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது:
தற்போதைய சூழல், கடந்த 90ம் ஆண்டுகளில் வங்கதேசத்தில் காலரா தொற்று ஏற்பட்டபோது, நான் மக்களுக்கு பணியாற்றியதை ஞாபகப்படுத்துகிறது.

மேமன்சிங் பகுதியில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் நான் கடந்த 1991ம் ஆண்டு பணியாற்றியபோது காலரா பரவியது. 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 8,000 பேர் பலியாகினர். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் வருவர். நான் அவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது நான் முகக்கவசம், கையுறை கூட பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த கொரோனா மோசமான கொள்ளை நோய். இதற்கு அனைத்து முன்னெச்சரிக்கையும் அவசியம். தற்போது உலகம் முழுவதும் மருத்துவத்துறையினர் ஓய்வின்றி உழைக்கின்றனர். இதை நான் பெருமையாக உணர்கிறேன்.

மனித இனத்தை காப்பாற்றுவதற்காக, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டதால், என்னால் மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்ப முடியாது. நான் முழு நேர எழுத்தாளராகி விட்டேன். எனது ‘மை கேர்ள்குட்’ புத்தகம் கடந்த மாதம் வெளியானது. லஜ்ஜா புத்தகத்தின் தொடர்ச்சியான ‘ஷேம்லெஸ்’ நாளை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், முடக்கம் காரணமாக தள்ளிப்போகிறது. முடக்கத்துக்குப்பின் மக்களுக்கு படிக்க நேரம் இருக்குமா எனத் தெரியவில்லை,’’ என்றார்.

Tags : Taslima Nasreen ,cholera spread ,Bangladesh , Cholera, Mask, Glove, Bangladesh, Taslima Nasreen
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...