×

கொரோனா ஒழிப்பு நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?

சாதாரண காலங்களிலேயே மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டும் போக்கு மத்திய அரசிடம் இருக்கிறது. ஆனால் கொரோனா கொள்ளை நோய் மிரட்டி வரும் இந்தக் காலத்திலும் அதே பாரபட்சத்தை காட்டுவதுதான் கொடுமை. குறிப்பாக தமிழகத்துக்கு தொடர்ந்து ஓரவஞ்சனையே செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசின் இந்த பாகுபாடு அப்பட்டமாக தெரிந்தது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு வெறும் 510 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாத மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு முறையே ₹910 கோடி, ₹708 கோடி என அதிகளவில் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே கஜா புயலுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியே வந்து சேரவில்லை.

ஜிஎஸ்டியிலும் 7 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தமிழகத்துக்கு கிடைக்கும் தொகை 314 கோடி தான். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல துறைகளின் வழி வரும் பெரும் வருவாயும் அடைபட்டிருக்கிறது. இதனால் நிதியின்றி தள்ளாடும் தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு எந்த நியாயமும் இல்லாது ஒதுக்கிவைப்பது நியாயம்தானா. இதுகுறித்த நான்கு ஆளுமைகளின் அலசல் இங்கே:

கொரோனா புதுவித பேரிடர்  கூடுதல் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்:  கிருஷ்ணன், தமிழக நிதித்துறை செயலாளர்:
₹9 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நம்மை போன்று மற்ற மாநிலங்களும் கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு எத்தனை கட்டங்களாக விடுவிக்கும் என்பது தான் தெரியவில்லை.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசு தர வேண்டும். இதில், தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம், அதையொட்டிய மற்றும் இதர செலவினங்களையும் மாநில அரசு பராமரிக்க வேண்டியிருக்கிறது.  இந்த  நிலையில் ஏற்கனவே, நம்  மாநிலத்தின் வருவாய் எல்லாம் மிகவும் குறைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு  எல்லாவற்றையும் எதிர்நோக்க வேண்டியிருப்பதால் தான், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து  ரூ.1 லட்சம் கோடி தர வேண்டும் என்று சொன்னோம்.

நமது மாநிலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் தரும் அளவுக்கு நிதி நிலை உள்ளது. ஆனால், நிதி இல்லாமல் பல மாநிலங்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் உள்ளன. தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி வருவாய், பதிவுத்துறை மூலம் வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் வருவாய் குறைந்து  விட்டன.  இந்நிலை யில் கடன் வாங்கினாலும் நம்மால் கடனை திருப்பி தர முடியாது. மத்திய அரசு மானியமாக கொடுத்தால் தான் இதையெல்லாம் ஈடுகட்ட பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும். அதே நேரத்தில் மாநில அரசு கடன் வாங்கினால் கொஞ்சம் கூடுதல் வட்டியில் தான் வாங்க முடியும்.

எனவே, தான் ஒட்டுமொத்த நாட்டில் உள்ள மாநிலங்களின் நலன் கருதியும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் தான் மானியம் கேட்டுள்ளோம். ரூ.9 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நம்மை போன்று மற்ற மாநிலங்களும் கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு எத்தனை தவணையில் விடுவிக்கும் என்பது தான் தெரியவில்லை.  ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் நிதி மத்திய அரசால் விடுவிக்கப்படுகிறது. இந்த நிதி 2 தவணைகளால் அளிக்கப்படுகிறது. தமிழகத்துக்கு மொத்தம் ரூ.1020 கோடி வர வேண்டியுள்ளது.

இதில், முதல் தவணையாக தேசிய பேரிடர் நிதியாக மத்திய அரசு ரூ.510 கோடி தமிழக அரசுக்கு விடுவித்துள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இது தொடர்பாக விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இது, புதிய நிதி கிடையாது. நமக்கு வர வேண்டிய நிதி தான். 15வது நிதிகுழுமத்தின் பரிந்துரையின் பேரில் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக இந்த நிதி தரப்படுகிறது.  மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கிற நிதியில் தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளோம். தேசிய பேரிடர் நிதி தமிழகத்துக்கு கூடுதலாக தர வேண்டும் என்று நாம் கூறியுள்ளோம். மற்ற மாநிலத்துக்கு 120 சதவீதம் கூடுதலாக தந்துள்ளனர். ஆனால், நமக்கு 65 சதவீதம் தான் கூடுதலாக தந்துள்ளனர்.

தமிழகத்தில் வரலாறு அடிப்படையில் பேரிடரில் எவ்வளவு செலவாகி இருக்கிறது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு செலவாகி இருக்கிறது, என்னென்ன பாதிப்பு உள்ளது என்பதை பார்த்து இருக்க வேண்டும். இந்த முறை பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சி என்பதை பார்த்து தான் ஒதுக்கீடு செய்துள்ளனர். மற்றதையும் பார்த்து இருக்க வேண்டும். குறிப்பாக, கொரோனா என்பது புதுவிதமான பேரிடர். இவையெல்லாம் திடீரென ஏற்படக்கூடிய பேரிடர் என்பதால் அவற்றையும் கவனத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முதல்வரின் கடிதத்தின் மூலம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்.

உரிமையை தொலைத்துவிட்டு கெஞ்சும் மாநில அரசுகள்:  ஜெயரஞ்சன், பொருளாதார வல்லுனர்:
* மத்திய அரசிடம் உரிமையை கொடுத்து விட்டு எப்படி பெற முடியும் என்பதை மாநில அரசுகள் யோசிக்க தவறி விட்டது. எல்லாவற்றையும் தொலைத்து விட்டு
மாநில அரசுகள் இப்போது நிற்கின்றனர்.

நமது அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசுகளுக்கு கடமைகள் அதிகம். ஆனால், உரிமைகள் இல்லை. ஒன்றிய அரசுகளுக்கு, அதாவது மத்திய அரசுக்கு, கடமைகள் குறைவு. ஆனால், உரிமைகள் அதிகம். இந்த சமமற்ற நிலையை தான் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இந்த சமமற்ற நிலையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக தான் நிதிகுழுமத்தை உருவாக்கினார்கள். இந்த நிதிகுழுமம் தற்சார்பாக செயல்படக்கூடிய அமைப்பு என்பது தான். ஆனால், மத்திய அரசு வரையறுப்பதன் மூலம் அந்த நிதிக்குழுமத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருகிறது. அதன் விளைவு தான் தமிழக அரசு சார்பில் என்னதான் கரடியாக கத்தினாலும் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்கிறார்கள்.

 எடுத்துக்காட்டாக, கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் நிதியை பகிர்ந்தளிக்க போவதாக நிதிக்குழுமம் கூறியது. தென்மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் அதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை. அவர்கள் 2011யை அடிப்படையாக வைத்து தான் நிதியை பகிர்ந்தளித்துள்ளனர். தென் மாநிலங்கள் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்துள்ளனர். அது என்னவென்றால் ஜிஎஸ்டியில் அனைவரும் கையெழுத்து போட்டது தான். இதன் மூலம் மாநில அரசுகளுக்கு இருந்த வரி விதிக்கும் உரிமையை மொத்தமாக மத்திய அரசிடம் எழுதி கொடுத்து விட்டனர். இப்போது மத்திய அரசிடம் மாநில அரசுகள் எனக்கு நிதி கொடு என்று கெஞ்சி வருகின்றனர்.  மத்திய அரசிடம் உரிமையை கொடுத்து விட்டு எப்படி பெற முடியும் என்பதை மாநில அரசுகள் யோசிக்க தவறி விட்டன. இப்படி உரிமைகள் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மாநில அரசுகள் இப்போது நிற்கின்றனர்.

ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம், ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி நம்மை மத்திய அரசு ஏமாற்றியது. அதை நம்பி நாம் கையெழுத்து போட்டதன் விளைவு, இப்போது நாம் ஏதாவது பார்த்து போட்டு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ₹9 ஆயிரம் கோடி கேட்டதற்கு தற்போது பேரிடர் நிதி என ₹510 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதுவும் என்ன உறுதியாக என்று தெரியவில்லை. கடிதம் வந்தால் தான் தெரியும். நிஜமாக கொடுத்துள்ளனரா, இந்த நிதி, எதில் இருந்து கொடுத்து இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வரும். இவர்களை பார்த்தால் நிச்சயமாக தர மாட்டார்கள் என்று தான் தெரிகிறது.

மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு தர வேண்டும். அதை 4 மாதங்களாக தராமல் உள்ளனர். இவ்வளவு இடைஞ்சல் வந்த பிறகு தரவில்லை என்றால் மாநில அரசு எப்படி இந்த பிரச்னையை சமாளிப்பார்கள்.  கடந்த 5 வருடங்களாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சீரழிந்து நிற்கிறது்
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பணம் அளவு 17 லட்சம் கோடி. மேல் தட்டில் இருக்க கூடிய அதாவது பெரும் பணக்காரர்களிடம் 1 சதவீதம் பேரிடம் 60 சதவீதம் பணம் உள்ளது. அதில், 10ல் ஒரு பங்கு பேரிடம் 17 லட்சம் கோடியில்  3ல் ஒரு பங்கு அதாவது, 6 லட்சம் கோடி பணம் உள்ளது.

அதற்கு கீழே இருக்கிறவர்களிடம் ஒரு சிலரிடம் பணம் இருக்கும். ஒரு சிலரிடம் பணம் இருக்காது. அதிலும் கீழ் இருக்கிறவர்களிடம் இந்த லாக் டவுன் முடியும் போது அவர்களிடம் 5 பைசா கூட இருக்காது. மீண்டும் அவர்கள் வறுமைக்கு கீழே போய் இருப்பார்கள். இன்னும் லாக் டவுன் நீட்டிக்கப்பட்டால் வேலை வாய்ப்பு இருக்காது. வறுமை கடுமையாக இருக்கும்.

தமிழகத்துக்கு சிறப்பு நிதி மத்திய அரசு தரலாம்:  சத்யா, பொருளாதார நிபுணர்:
* அந்த நிதியே கட்டமைப்புக்கு தானே தவிர நிவாரணத்துக்கு இல்லை. மத்திய நிதி அமைச்சகம் 1.75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அதிக நபர்களுக்கு நிதி சேர்த்தது தமிழ்நாடு தான்.

தமிழகத்துக்கு பாஜ மட்டுமின்றி காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் குறைவாக தான் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. கடந்த 1960க்கு பிறகு மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை தந்ததில்ைல. இதற்கு மத்திய அரசு கூறும் காரணம், தமிழகம் வளர்ந்த மாநிலம். இரண்டாவது தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம் ஆகும். நிலங்களிலேயே அதிக வருவாய் வரக்கூடிய மாநிலம் தமிழகம் தான். அதனால்தான் மத்திய அரசு நிதி குறைவாக தருகின்றனர்.தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு, மக்கள் தொகை, பாதிப்பு ஆகிய மூன்றையும் கவனத்தில் வைத்து தான் நிதி தரப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் சுகாதார கட்டமைப்பில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே சென்னை தான் மருத்துவமனைகள் நிறைந்த பகுதி. இங்கு சிகிச்சைக்காக வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பலர் வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்கள் தொகை குறைவு தான். கொரோனாவுக்கு பேரிடர் நிதியாக முதலில் தரும் போது தமிழகத்தில் பாதிப்பு குறைவாக தான் இருந்தது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிக்கான கட்டமைப்பை மேம்படுத்த தான் பணம் தருகின்றனர். தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு நன்றாக இருப்பதால் தமிழகத்தில் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு நிவாரண தொகை தரப்போவதில்லை. கட்டமைப்பு இல்லாத மாநிலத்துக்கு தான் மத்திய அரசு தரப்போகிறது.

இதனால், மத்திய அரசு மற்ற மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நிதி தருகின்றனர். மற்ற மாநிலங்களும் கட்டமைப்பு மேம்படுத்துவது அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது.  அந்த நிதியே கட்டமைப்புக்கு தானே தவிர நிவாரணத்துக்கு இல்லை. மத்திய நிதி அமைச்சகம் 1.75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அதிக நபர்களுக்கு நிதி சேர்த்தது தமிழ்நாடு தான். இங்கு தான் ஜன்தன் வங்கி கணக்கு அதிகம் பேர் வைத்துள்ளனர். அவர்களுக்கு நேரடியாக மத்திய அரசு அந்த வங்கி கணக்கில் நிவாரண நிதி செலுத்தியுள்ளது. கொரோனா நிதி குறைவுக்கு காரணம் மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் நன்றாக இருப்பது தான். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளது.

அதனால், தான் குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழக அரசு மொத்தமாக ரூ.9 ஆயிரம் கோடி கொடுத்தால் மக்களுக்கு நிவாரண தொகையாக அளிப்போம் என்கிறது. ஆனால், மத்திய அரசு எங்களிடம் தான் ஜன்தன் வங்கி கணக்கு இருப்பதால் எங்களுக்கு தேவை என்றால் நேரடியாக கொடுக்கிறோம் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்.
மக்கள் தொகை அடிப்படையாக வைத்து பேரிடர் நிதியை தரக்கூடாது என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கூற முடியாது. ஆனால், நிதி கமிஷன் ஒதுக்கீட்டை தாண்டி வேறுவழியாக தமிழகம் நிதி கேட்கலாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி குழுமம் தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவை வைத்து தான் நிதி தருகின்றனர். அந்த அளவை நிச்சயம் மாற்ற வேண்டும்.

தமிழகத்துக்கு நிதி பற்றாக்குறை இருக்கும் போது சிறப்பு நிதி கேட்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிற நிதி ரூ.15 ஆயிரம் கோடி நமக்கு கிடையாது. நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு நிதி தர வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும். தற்போது நாட்டிலேயே ெகாரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பதால் ஒரு வேளை தமிழகத்துக்கு சிறப்பு நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.

கொரோனாவுக்கு தனி மருத்துவமனை தேவை:  பாலகிருஷ்ணன், அரசு டாக்டர்:
* இப்போது இருக்கிற மருத்துவர்களை கொரோனாவுக்கு மாற்றும் போது சாதாரண நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, கொரோனாவுக்கென்று தனி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த நோயாளிகள் அருகில் இருந்து தும்மினாலேயே இந்த வைரஸ் தொற்று ஏற்படும் எனும் போது டாக்டர்கள் பாதிக்கிற வாய்ப்புகள் அதிகம். அப்படியிருக்கிற சூழ்நிலையில், மருத்துவத்துறை மக்களை காக்கிற துறை என்கிற அடிப்படையில் டாக்டர்கள், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, பணியில் இருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க வேண்டும்.

கொரோனா பாதித்த நோயாளிகளுக்காக தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மருத்துவமனையில் ஒரு வார்டாக வைக்க கூடாது.
கொரோனாவுக்கென மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட, அதாவது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள கட்டிடத்தில் இந்த மருத்துவமனை அமைக்க வேண்டும். அந்த மருத்துவமனைகளில் தேவையான வெண்டிலேட்டர்கள் வைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 5 சதவீத மக்கள் கடுமையான சூழ்நிலைக்கு போகிறார்கள் என்பது தெரியும். இந்தியாவை பொறுத்தவரை 130 கோடியில் 5 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிதீவிர சிகிச்சை தரக்கூடிய மருத்துவமனையாக அமைக்க வேண்டும்.

ஒரு மாவட்டத்துக்கு ஒரு தனி மருத்துவமனை அமைக்க வேண்டும். அந்தந்த மாவட்ட மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். இந்த மருத்துவமனை அமைப்பதால் வீண் என்று இப்ேபாது நினைத்தால் கூட வருங்காலங்களில் நிச்சயம் ஏதோ ஒரு தேவை வரும். புதிதாக மருத்துவமனை அமைக்கிறோமோ, இல்லையோ அதற்காக தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடங்களை தேர்வு செய்யும் கொரோனா மருத்துவமனையாக அமைக்க வேண்டும். சீனா 15 நாட்களில் கொரோனாவுக்காக மருத்துவமனை அமைத்தது. அது போன்று, தமிழகத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று மருத்துவமனை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவம் சார்ந்த பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும். கடந்த 10 வருடமாக துப்புரவு பணியாளர்களை எடுக்கவில்லை.

இப்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் துப்புரவு பணியாளர்கள் எடுக்கின்றனர். அவர்கள் இந்த மாதிரியான நேரங்களில் வேலைக்கு வருவார்களா என்பது சந்தேகம் தான். எனவே, நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும். இப்போது இருக்கிற மருத்துவர்களை கொரோனாவுக்கு மாற்றும் போது சாதாரண நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, கொரோனாவுக்கென்று தனி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்க வேண்டும். ெகாரோனா மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இவர்களில்  118 பேரை டிரான்ஸ்பர் செய்தனர். அவர்களது டிரான்ஸ்பரை ரத்து செய்ய வேண்டும். கஷ்டப்பட்டு தான் பலர் வேலை செய்து வருகின்றனர். இப்போது பலர் பயந்து வேலை செய்கின்றனர். இந்த நேரத்தில் நாங்கள் எந்தவித நெருக்கடியும் தரவில்லை. அரசே முன்வந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும். தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் உள்ளனர். கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக 20 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

Tags : government ,states ,Corona , orona, Finance, States, Federal Government
× RELATED கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில்...