×

கொரோனாவால் 40 ஆண்டில் இல்லாத அளவுக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம்: மிக மோசமாக பாதிக்கப்படும்: உலக வங்கி எச்சரிக்கை

* இந்தியாவில் ஊரடங்கால் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை  உருவாகும்

புதுடெல்லி: கொரோனாவால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
 கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனமும் ஜிடிபி 1.6 சதவீதமாக குறையும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும் மதிப்பீடு செய்துள்ளன.  இதுபோல், உலக வங்கியும் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், கொரோனா பாதிப்பால் தெற்காசிய நாடுகளில் உள்ள 8 நாடுகளின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) இந்த ஆண்டில் 1.8 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதம் முன்பு வெளியிட்ட கணிப்பில், ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.5 சதவீதம் முதல் 2.8 சதவீதத்துக்குள் இருக்கும். கடந்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 4.8 சதவீதம் முதல் 5 சதவீதத்துக்குள் காணப்படும்.

இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள். சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவாகும். இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேச நாடுகளின் பொருளாதாரத்தில் கணிசமான சரிவு காணப்படும்.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுளில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Tags : countries ,Asian ,Corona ,World Bank , Corona, Asian Countries, Economy, World Bank
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...