×

பல நூற்றாண்டு பாரம்பரியத்தை உடைத்து தனி அறையில் கேமரா முன் போப் பிரான்சிஸ் ஈஸ்டர் உரை: கொரோனாவால் பாதித்த மக்களுக்காக பிரார்த்தனை

வாடிகன் சிட்டி: கொரோனா முடக்கம் காரணமாக, போப் பிரான்சிஸ் பல நூற்றாண்டு பாரம்பரியத்தை உடைத்து, தனி அறையில் கேமரா முன் அமர்ந்து நேற்று ஈஸ்டர் பிரார்த்தனையை நடத்தினார். இது, டிவி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  ஈஸ்டர் தினத்தன்று வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரார்த்தனை நடத்தும் நிகழ்வு நடைபெறும். கடந்தாண்டு நடந்த ஈஸ்டர் தினத்தில் செயின் பீட்டர் சதுக்கத்தில் 70 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். அவர்களுக்கு போப் ஆசி வழங்கினார். ஆனால், இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உயிர் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டதால், உலக நாடுகள் முடக்கத்தில் உள்ளன. இத்தாலி முழுவதும் முடங்கிப்போய் மக்கள் பீதியில் உள்ளனர்.  

வாடிகன் நுழைவு வாயில் சீல் வைக்கப்பட்டு, முகக் கவசம் அணிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், ஈஸ்டர் தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமின்றி கொண்டாடப்பட்டது. வாடிகன் நகரில் 83 வயதான போப் பிரான்சிஸ், காலியான வாடிகன் சதுக்கத்தில் புனித  வெள்ளி ஊர்வலத்தை நடத்தினார்.  மருத்துவ ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும்  வகையில் இந்நிகழ்ச்சிக்கு 5 நர்ஸ்கள், டாக்டர்களை மட்டும் போப்  அழைத்திருந்தார். ஈஸ்டர் தினமான நேற்று பல நூற்றாண்டு பாரம்பரியத்தை உடைத்து, தனது தனிப்பட்ட நூலக அறையில் இருந்து கேமரா முன் அமர்ந்து ஈஸ்டர் தின உரையை அவர் நிகழ்த்தினார். அது டிவி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இன்று எனது சிந்தனையெல்லாம், கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாதவர்கள் பற்றியே இருக்கிறது. கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை நாடுகள், நல்ல நிலைக்கு வர வேண்டும். அதற்கு இப்போதைய தேவை அவர்களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்,’’ என்றார்.  கத்தோலிக்க பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘முடக்கநிலையை நாம் ஆற்றலுடன் எதிர்கொள்ள வேண்டும்.  

இந்த நேரத்தில் நமக்கு மனச்சோர்வு ஏற்படலாம் அல்லது தனிமைபடுத்தப்பட்டது போல் உணரலாம் அல்லது ஆக்கப்பூர்வமாகவும் உணரலாம். அகநோக்கு பார்வை மூலம், முடக்கநிலை கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் தெய்வீக உணர்வுடன் தப்பிக்க முயற்சிக்கலாம். ஆகையால், தெய்வீக நினைவுகளுடன் விருப்பத்துடன் முடக்க நிலையில் இருந்து நம்பிக்கை பெறுங்கள். இது முடக்கநிலை கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்க உதவும்,’’ என்றார்.

ஹெலிகாப்டரில் பறந்து ஆசிர்வாதம்

* ஸ்பெயினில் உள்ள கிறிஸ்தவர்கள் பால்கனியில் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
*  பிலிப்பைன்ஸ் தேவாலயங்களில் ஏசுநாதர் அறையப்பட்ட சிலுவையை யாரும் முத்தமிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.  
* பனாமா நாட்டு பேராயர், ஹெலிகாப்டரில் பறந்து நாட்டு மக்களுக்கு ஆசி வழங்கினார்.

Tags : speech ,room ,Pope Francis Easter ,Corona , Centennial, Francis, Easter, Corona
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே