×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் டிஸ்சார்ஜ்; போரிஸ் வீடு திரும்பினாலும் பணிகளை தற்போது தொடர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த மாதம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு, சமீபத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜான்சனில் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நல்ல உடல்நிலையில் உள்ள போரிஸ் ஜான்சன் நேற்றுமுன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை தேறியதால், நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக ஏ.எப்.பி  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினாலும் அரசுப்பணிகளை தற்போது தொடர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர்; டாக்டர்களின் குழுவின் பரிந்துரைப்படி, பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனடியாக தனது பணிக்கு திரும்ப மாட்டார். தனக்கு கிடைத்த அற்புதமான கவனிப்புக்காக செயின்ட் தாமஸில் உள்ள அனைவருக்கும் நன்றி என போரிஸ் ஜான்சன் கூறினார். அவரது எண்ணங்கள் அனைத்தும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி இருக்கிறது என கூறியுள்ளார்.

Tags : Boris ,Corona ,UK ,doctors ,home , Corona, Prime Minister of England, discharged
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண,...