×

கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் 4 கோடி குழந்தைகள் பசியிலேயே தூங்குகின்றன: பிபிசி செய்தி நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் 4 கோடி குழந்தைகள் பசியில் தூங்கச் செல்வதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும். இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர். வீடற்ற அந்த குழந்தைகள் விவசாயம் சார்ந்த வேலைகள் சாலைகளில் பொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். டெல்லியில் மட்டும் 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தெருக்களில் வசிப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த குழந்தைகளின் வாழ்க்கை ஊரடங்கால், பல இன்னல்களை சந்தித்து வருகிறது.  அவர்கள் என்ன உண்பது எப்படி நாட்களை கழிப்பது போன்றவற்றில் மிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சேட்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்தியாவில் வீடற்ற குழந்தைகள் பெரும்பாலும் உள்ளனர். அவர்கள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் வசித்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இந்த குழந்தைகள எங்கே தங்குவார்கள்? இவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்களிடம் பெரும்பாலும், மொபைல்போன்கள் உள்ளன.

எனவே எங்கள் அமைப்பின் மூலமாக அவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை அனுப்புகிறோம். அவர்களும் பதிலுக்கு சில வீடியோக்களை அனுப்புகின்றன. அவை அவர்கள், வாழ்க்கையில் இருக்கும் எதிர்கால பயத்தை உணர்த்துகிறது என கூறினார். அவ்வாறு வீடியோ அனுப்பியதில் ஒரு சிறுவன் தான் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், யாரோ ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து உணவு வந்து வழங்கியதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர்; இந்த ஊரடங்குக்கு பின் அரசு வழங்கியுள்ள தொலைபேசி அழைப்புகளில், குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வழங்க கிட்டத்தட்ட 300,000 அழைப்புகள் வந்துள்ளது. இந்தியாவில், 718 மாவட்டங்களில் 569 குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன் இயங்குகிறது.

மேலும், 128 ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அழைக்கும் வசதி உள்ளது. இதில், அனைத்திலும் காணாமல்போன குழந்தைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்று பல அழைப்புகள் நாள்தோறும் வந்தவண்ண உள்ளன எனவும் கூறியுள்ளார்.


Tags : babies ,news agency ,BBC ,India , Corona Curfew, India, Child Hunger, BBC News Agency
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்