×

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் இயற்கை விரும்பிகளாக மாறும் பொதுமக்கள்: உள் நாட்டு காய்கறிகளுக்கு மவுசு வேப்பிலை, மஞ்சளுக்கு முக்கியத்துவம்

நாகர்கோவில் :  கொரோனா தொற்று பீதியால், மக்கள் உள்நாட்டு காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்கள். வேப்பிலையும், மஞ்சளும் வாழ்வின் அங்கமாக மாறி உள்ளது.
உலக மக்களை  கொத்து, கொத்தாக காவு வாங்கி வரும், கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் இந்தியர்களும் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது 3 வது கட்டமான சமூக பரவலை நாம் எட்டி இருக்கிறோம். இனி வரும் 3 வார காலம் தனிமைப்படுத்துதல் ஒன்றே மிகப் பெரிய தீர்வாக அமையும் என மருத்துவ வல்லுனர்கள் கூறி உள்ளார்கள். அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற உலக வல்லரசு நாடுகளை தவிடுபொடியாக்கிய கொரோனாவின் ஆட்டம், இந்தியாவில் எடுபடவில்லை என்றே கூறலாம். அதன் அதிரடியை இங்கு காட்ட முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை ஊரடங்கு போன்ற பல நடவடிக்கைகள் என கூறப்பட்டாலும், முக்கியமாக இந்தியர்களின் உணவு பழக்க வழக்கங்கள், கலாச்சார நடைமுறைகள் போன்றவை கொரோனாவை கட்டுப்படுத்த உதவி இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது இயற்கை மற்றும் நாட்டு மருத்துவத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறது கொரோனா.

பர்கர், பீட்சா என வெளிநாட்டு உணவுகளை வாங்க படையெடுத்த மேல் மட்ட வர்த்தகத்தினரையும் இப்போது நாட்டு மருந்து கடைகளில் கபசுரக்குடிநீர் வாங்கவும், மார்க்கெட்டுகளில் இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தேடி, தேடி வாங்கவும் வைத்திருக்கிறது கொரோனா. சிக்கன், மீன் , முட்டை, இறைச்சி இல்லாமல் சாப்பிட மாட்டோம் என அடம் பிடித்தவர்கள் எல்லாம் இப்போது ஒரேடியாக அவற்றை புறந்தள்ளி விட்டு தக்காளியையும், கத்திரிக்காய், வெண்டைக்காய், பல்லாரி போன்ற காய்கறிகளை சமைத்து ஆர்வத்துடன் உண்ணுகிறார்கள். வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கி அருந்துவது தான் நாகரீகம் என்று எண்ணி இருந்த மக்கள், இப்போது மஞ்சள், வேப்பிலையை அரைத்து குடிக்க தொடங்கி உள்ளனர். ஏழை, பணக்காரன் என்ற எந்த வித வேறுபாடும் இல்லாமல் எல்லோர் வீட்டு வாசலையும் வேப்பிலை இப்போது அலங்கரிக்கிறது.  வேப்ப மரத்தை பார்த்ததும் அதை தெய்வமாக வணங்க தொடங்கி விட்டனர். இட்லி, தோசை, உளுந்தங்கஞ்சி, கேப்பை கூழ் என உடலுக்கு ஆரோக்கியமான உணவை தேடி, தேடி உண்ண தொடங்கி விட்டனர். மிளகு ரசமும், பூண்டு துவையலும் தான் மிகப்பெரிய மருந்தாக மாறி உள்ளது. ஆங்கில மருத்துவத்தை தேடி, தேடி சென்ற பலர், நாட்டு வைத்தியர்களை தேடி சளி, இருமல் பிடிக்காமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கூறி வைத்திய குறிப்புகளை கேட்கிறார்கள். யூ டியூப்பில் நாட்டு மருத்துவ குறிப்புகள், பாட்டி வைத்தியத்தை டவுன் லோடு செய்து வைத்து அதை பின்பற்றுகிறார்கள். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் தான் தற்போது உயிர் காக்கும் கவசமாக மாறி உள்ளது.

இது குறித்து சித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர்  கேட்டு இப்போது மக்கள் அதிகளவில் வருகிறார்கள். கொரோனா தொற்று இப்போது மக்களை இயற்கையின் பக்கம் முழுமையாக திருப்பி உள்ளது. இனியாவது மக்கள், இயற்கைக்கு குறிப்பாக உள் நாட்டில் விளையும், உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வெளிநாட்டு என்ற ஆர்வத்தில் உடலுக்கு தேவையானவற்றை நாம் இழந்ததன் விளைவு தான் இப்போது கொரோனாவை கண்டு நாம் அச்சப்பட வேண்டி உள்ளது. அந்த கால தமிழர்கள் திடமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகள் தான் காரணம். எனவே மக்கள் இனியாவது இயற்கைக்கு மாற வேண்டும் என்றார்.

நிலா சோறு சாப்பிடும் மக்கள்
ஊரடங்கு உத்தரவால் கடந்த 25ம் தேதி முதல் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். இதன் விளைவாக தற்போது பழங்கால விளையாட்டுக்களை விளையாட தொடங்கி விட்டனர். பல்லாங்குழி, நொண்டியடித்தல் போன்ற விளையாட்டுக்களில் சிறுமிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுவரை அக்கம் பக்கத்தினரிடம் பேசாமல் இருந்தவர்கள் கூட, இப்போது உரிமையுடன் பேசி வீட்டின் மாடிகளில் நின்று அரட்டை அடிக்கிறார்கள். இரவு நேரங்களில் வீடுகளின் மொட்டை மாடியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடுகிறார்கள். அழிந்து போன பல தமிழ் கலாச்சார முறைகளுக்கு கொரோனா உயிர் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.



Tags : coronavirus populations ,favorites , Increasing, corona,natural disorders, yellow
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...