கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தீவிரம்

மஞ்சூர்: மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதை தொடர்ந்து தேயிலை உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. மஞ்சூர், கண்டிபிக்கை, கரியமலை, தொட்டகம்பை, மேல்குந்தா, கீழ்குந்தா, மட்டகண்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களை  சேர்ந்த சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம்  இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையின் மூலம்  தொழிற்சாலையில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்  கடந்த மாதம் 25ம் தேதி முதல் தொழிற்சாலையில் உற்பத்தி  நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பசுந்தேயிலை பறிப்பதை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தேயிலை அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களின் பட்டியலில் வருவதால் தொழிற்சாலைகளை இயக்க மாவட்ட  நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் மஞ்சூர்  கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி துவங்கியது.  இந்நிலையில் இரு வார இடைவெளிக்கு பின் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை  கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு  அதிகரித்தது.இது குறித்து இணை இயக்குனரும் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை  தொழிற்சாலை மேலாண் இயக்குனரான கணபதி கூறியதாவது:- மஞ்சூர் கூட்டுறவு தேயிலை  தொழிற்சாலைக்கு கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் கிலோ பசுந்தேயிலை  வரத்து காணப்பட்டது. 17 ஆயிரம் கிலோ தேயிலை மற்றும் 5 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக தொழிற்சாலை வளாகம் முழுவதும் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டு தூய்மை பராமரிக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் கையுறை,  முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பணியாற்ற நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு சொந்தமான அனைத்து கொள்முதல்  மையங்களிலும் பசுந்தேயிலை கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்  சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>