×

மருத்துவ குழு ஆய்வுக்கு பின்னரே காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை திறக்க முடிவு: தொடர்ந்து தூய்மை பணி தீவிரம்

ஆறுமுகநேரி:  காயல்பட்டினம் அரசு மருத்துவமனை நேற்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில், வைரஸ் தொற்று இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், திறக்கும் முயற்சி தள்ளிபோனது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனை கடந்த 4ம் தேதி முதல் மூடப்பட்டது. தினமும் 400க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனை பூட்டியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து காயல்பட்டினம் பொதுநல அமைப்பினர் தமிழக சுகாதாரதுறை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 இதனையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்ட்டது. இதனிடையே கடந்த 9ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று (11ம் தேதி) முதல் மருத்துவமனை திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 6நாட்கள் தொடர்ந்து நகராட்சி சார்பில், நகராட்சி பணியாளர்கள் மருத்துவமனை பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் உள்ள அனைத்து பொருட்கள் மற்றும் டேபிள், சேர், பெஞ்ச் ஆகியவற்றை வெளியே எடுத்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினர். இதனை தூத்துக்குடி துணை இயக்குநர் டாக்டர் பொன்இசக்கி, அரசு மருத்துவக்கல்லூரி சமூக நலன் மற்றும் நோய்தடுப்பு பிரிவு உதவி பேராசிரியர் டாக்டர் சபீதா ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது புறநோயாளிகள் பிரிவு, பெண்கள் வார்டு திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையே மருத்துவமனைக்குள் வைரஸ் தொற்று ஏதாவது ஒரு பகுதியில் இருந்து அதன் மூலம் யாருக்காவது பரவிவிடக்கூடாது. மேலும் கூடுதல் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என ஆய்வு செய்ய வந்த மருத்துவக்குழுவினர் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை திறக்கும் முயற்சி தள்ளிப்போனது. நகராட்சி பணியாளர்கள் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டனர். மருத்துவ அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்த பிறகே காயல்பட்டினம் அரசு மருத்துவமனை திறக்கும் தேதி தெரியவரும் என கூறப்படுகிறது.  



Tags : Gayalpattinam Government Hospital ,cleanup ,team inspection ,government , medical , study, Government, Gayalpattinam, Government ,hospital
× RELATED தேயிலை தொழிற்சாலை, படகு இல்லம் மற்றும்...