×

கொரோனா வைரஸ் ஊரடங்கால் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் கட்டுமான பணிகள் நிறுத்தம்: 5 லட்சம் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிப்பு

சேலம்: ெகாரோனா வைரஸ் பீதியால் தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள்  பாதியில் நிற்கிறது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வணிகநிறுவனங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், தயாரிப்பு கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வகையான தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் ெதாழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவில் விவசாயம், ஜவுளி உள்ளிட்ட தொழிலுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் கட்டிடப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டிடப்பணியில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சறுத்தலால் நாடு முழுவதும் நடந்து வந்த கட்டிடப்பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் முடியாமல் பாதியில் நிற்கின்றன. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அன்றாடம் குடும்பம் நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போதைய கணக்குப்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இத்தொழிலில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தொழிலை நம்பி செங்கல் எம்.சாண்ட், இரும்புக்கம்பி, கிரீல் தயாரிப்பாளர்கள், பெயிண்ட் கடை, மரக்கடை, எலக்ட்ரிக் சாமான்கள், பிளாஸ்டிக் பைப், சிமெண்ட் என பல கடைகள் உள்ளன. இத்தொழிலில் பல லட்சம் பேர் உள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கட்டுமான தொழிலை சார்ந்துள்ள நிறுவனங்கள், தயாரிப்பு கூடம், உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரம் பேரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டிடப்பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களில் கொத்தனாருக்கு நாள் ஒன்றுக்கு 650 முதல் 750 எனவும், சித்தாளுக்கு 250 முதல் ₹350 எனவும் கூலி வழங்கப்படுகிறது.

கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தினசரி வேலைக்கு சென்றால்தான், அவர்கள் குடும்பத்தை நடத்த முடியும். ஊரடங்கு அமல் தொடங்கி இன்றுடன் (நேற்று) 17 நாளாகிறது. இவர்கள் ஏற்கனவே தங்களது கையில் இருந்த சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு இத்தனை நாள் சமாளித்துவிட்டனர். இனியும் ஊரடங்கு உத்தரவு நீடித்தால், இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். தற்போது சாதாரண குடும்பத்திற்கே நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை செலவு ஏற்படுகிறது. அரசு என்னதான் நிவாரண நிதி வழங்கினாலும், அந்த தொகை ஓரிரு நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இவ்வாறு இன்ஜினியர்கள் கூறினர்.

தமிழகத்தில் ஒரு லட்சம் இன்ஜினியர்கள் பாதிப்பு
தமிழகத்தில் கட்டுமான பணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் கட்டிடப்பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனர். ஒரு சிலர் மாத சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பீதியால் கட்டிடப்பணிகள் அனைத்தும்  பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மாதசம்பளத்திற்கு பணியாற்றுவோருக்கு  கடந்த மாதமே ஆறு நாள் சம்பளம் இல்லை. நடப்பு மாதத்தில் நேற்று வரை சம்பளம் இல்லை. ஊரடங்கு நீடித்தால் நடப்பு மாதம் முழுவதும் சம்பளம் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக முடியும் என்பதும் இன்ஜினியர்களின் குமுறல்.

Tags : Thousand Strike Stops ,Tamil Nadu , 50 thousand, Coronavirus ,work, income
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...