×

சிக்கன் குழம்பு, கமகமக்கும் மேட்டூர் மீன் 24 மணி நேரம் பணியாற்றும் சேலம் போலீசாருக்கு உணவு: அரிசி, பருப்பு பொருட்களை எஸ்.பி வழங்கினார்

சேலம்: சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு உணவு சமைத்து கொடுக்கும் வகையில் அதற்கான பொருட்களை எஸ்.பி. வழங்கிய நிலையில், சிக்கன் குழம்பு, கமகமக்கும் மேட்டூர் மீன்களை போலீசார் சாப்பிட்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.கொரொனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பணியில் இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களால் சாப்பிட முடியவில்லை. வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்களுக்கு உணவு தயாரித்து கொடுக்க சேலம் எஸ்.பி. தீபா கணிக்கர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ₹2.50லட்சம் மதிப்பிலான 1,750 கிலோ அரிசி, 350 கிலோ பருப்பு, 200 லிட்டர் எண்ணெய், சமையல் பொருட்கள், குடிநீர், மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை 6 சப்-டிவிசன்களுக்கும் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் மல்லூர், ஆட்டையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், தம்மம்பட்டி, வாழப்பாடி, கருமந்துறை, கரியகோயில், மேட்டூர், கொளத்தூர் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு அந்தந்த போலீஸ் ஸ்டேசன்களில் உணவு சமைக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் போலீசாரும், பணிக்கு வரும் போலீசாரும் சாப்பிட்டுவிட்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதில் வாழப்பாடி சோதனை சாவடியில் பணியாற்றி வரும் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் சிக்கன்குழம்பு வைத்து வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூரில் உள்ள போலீசாருக்கு தினமும் கமகமக்கும் மீன் குழம்பு வைத்து வழங்கப்பட்டது. இதனால் போலீசார் உற்சாகமாக பணியாற்றி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kamakamakum ,Mettur ,Salem ,SP , Chicken curry, kamagama , Police, Rice, SP
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி