×

ஆட்சியர்களுக்கு மட்டுமே அனுமதி; அம்பேத்கர், தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்...அரசு வேண்டுகோள்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். 8.356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனாலும், காய்கறி மார்க்கெட்டில் தினசரி காலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வருகிற 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால், இதை மேலும் நீட்டிக்க வேண்டுமா, முடித்துக்கொள்ளலாமா என்பது குறித்து பிரதமர் மோடியும் அனைத்து மாநில முதல்வர்களிடம் நேற்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதனைபோல், ஏப்ரல் 17ம் தேதி நடைபெறவுள்ள தீரன் சின்னமலையின் பிறந்தநாளிலும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழாவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : rulers ,Theeran ,Ambedkar ,Chinnamali Birthday Celebration ,Birthday Celebration ,Sinnamalai , Only the rulers are allowed; Ambedkar, Theeran Sinnamalai Birthday Celebration
× RELATED பெரம்பலூர் அருகே மனநலம் பாதித்தவர்...