×

ரேபிட் டெஸ்ட் கிட் தாமத்திற்கு அமெரிக்கா காரணமா?; நவீன கொள்ளையில் ஈடுபட்டு மருத்துவ உபகரணங்கள் பறிப்பதாக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 2,108 பேர் பலியாயினர். இதனால், இந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை தாண்டியது. கொரோனா பலி எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கும் இத்தாலியில் 19,468 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,108 பேர் பலியாயினர். 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்த முதல் நாடு என்ற இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக, முகக்கவசங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு அமெரிக்காவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நட்பு நாடுகளையே பகைத்துக் கொள்ளும் அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு உபகரணங்கள் செல்வதையும் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மற்ற நாடுகளுக்கு செல்லக்கூடிய மருத்துவ உபகரணங்களை, கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்து வாங்குவது, அமெரிக்காவுக்கு அவற்றை திருப்பி விடுவது உள்ளிட்ட வேலைகளில் அமெரிக்கா ரகசியமாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்கள் முகக் கவசங்கள் உள்ளிட்ட எந்த ஒரு மருத்துவ உபகரணங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சீனாவில் இயங்கிவரும் 3 எம் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஜெர்மனி முகக் கவசங்களை ஆர்டர் செய்திருந்தது. சீனாவில் இருந்து தாய்லாந்து வழியாக ஜெர்மனிக்கு முகக் கவசங்கள் வர இருந்த நிலையில் பாங்காக் விமான நிலையத்தில் அமெரிக்கா அதிகாரிகள் அதனை பறித்து கொண்டதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இது நவீன திருட்டு என கூறிய ஜெர்மனி அரசு சர்வதேச வர்த்தக விதிகளை அமெரிக்கா மீறுவதாக கண்டனம் தெரிவித்தது. இதேபோல சீனாவில் இருந்து தங்களுக்கு வர வேண்டிய மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் பிரான்ஸுக்கு புறப்பட இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அமெரிக்கா வாங்கியது என பிரான்ஸின் கிழக்கு பிராந்திய தலைவர் ஜீன் ராட்னர் சாடியுள்ளார்.

மேற்கு கரீபியனில் உள்ள பிரிட்டனுக்கு சொந்தமான கேமேன் தீவுகளுக்கு செல்ல இருந்த கப்பலில் இருந்து வெண்டிலேட்டர்கள், முகக் கவசங்கள் மற்றும் மருத்துவ கருவிகளை அமெரிக்கா திருடியதாக அதன் தலைவர் ஆல்டன் மெக்லாலின் குற்றச்சாட்டியுள்ளார். தங்கள் நாட்டவர்களை காப்பதற்காக மற்ற நாடுகளுக்கு மருத்துவ கருவிகள் செல்வதை தடுப்பது, தவறானது என அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்களே எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் இந்த செயல்பாடு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிற்கு வர வேண்டிய பொருட்கள் முறையாக வந்து சேர்வதை உறுதி செய்ய தனி குழு ஒன்றையே அமைத்துள்ளார். இந்நிலையில், இந்தியாவிற்கு வர வேண்டிய கொரோனா பரித சோதனை கருவிகள், குறிப்பிட்ட காலத்திற்கு வந்து சேராததற்கும் அமெரிக்கா தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

Tags : countries ,US ,lootingUS , US blames Rapid Test Kit for delays; Various countries are accused of plundering modern equipment for modern looting
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...