×

பண மோசடியில் கைதான கொரியாவை சேர்ந்த இருவர் திருச்சி முகாமிலிருந்து காஞ்சிக்கு மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: பண மோசடியில் கைதான கொரியாவை சேர்ந்த இருவர், கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக தங்களை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மாற்ற கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள சாவல் இண்டியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சாய் ஜங் சுக் (46) மற்றும் பொது மேலாளராக பணியாற்றி வந்த ஜோ ஜீ வோன் (41) ஆகிய  கொரிய நாட்டை சேர்ந்த 2 பேர், ₹40.37 கோடி ஜிஎஸ்டி தொகையை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர்.   பின்னர் இவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா அபாயம் காரணமாக திருச்சி சிறப்பு முகாமில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றும், 40 பேர் அடைக்கப்பட வேண்டிய முகாமில் 80 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தங்களை திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தங்கும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பாக நடந்தது.

அப்போது அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘மனுதாரர்கள் கூறுவது போல திருச்சி சிறப்பு முகாமில் இடநெருக்கடியோ அல்லது சுகாதாரமின்மையோ இல்லை. 73 பேர் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் உள்ளனர்’ என தெரிவித்தார். பின்னர், காணொலி காட்சி மூலம் நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் திருச்சி சிறப்பு முகாமை பார்வையிட்டார். அதன்பிறகு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘திருச்சி சிறப்பு முகாமில் மனுதாரர்கள் கூறியது போன்ற நிலைமை இல்லை. மேலும் மனுதாரர்கள் இருவரையும் ெகாரோனா அச்சம் காரணமாக காஞ்சிபுரத்துக்கு மாற்ற உத்தரவிட்டால் மற்றவர்களும் இதுபோல தங்களையும் மாற்ற கோருவர் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எனவே மனுதாரர்களை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது என்பதால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Korean , Korean couple,arrested , money laundering
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...