பல்லாவரம் அருகே ஒரே நாளில் சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி

பல்லாவரம்: பல்லாவரம் அருகே 4 வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகெங்கும் இந்நோய் தாக்குதலுக்கு சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் இந்நோயின் தாக்குதலுக்கு 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்தநிலையில் கடந்த மாதம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தாய் மற்றும் மகன் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி, காந்தி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இச்சிறுமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் அவளை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பல்லாவரம், நேரு நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவரும் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.  அவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, நோய் தொற்று பரவுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் பொழிச்சலூரில் தாய் மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது, மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Related Stories:

>