×

இசிஆர், ஓஎம்ஆரில் கட்டுப்பாடு காரணமாக உட்புற சாலைகளில் வாகன ஓட்டிகள் உலா: விழிபிதுங்கும் போலீசார்

துரைப்பாக்கம்: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று யாருக்கேனும் கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சி 15வது மண்டலத்திற்கு உட்பட்ட 192வது வார்டு முதல் 200வது வார்டு வரை உள்ள பகுதிகளில் அனைத்து தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 தினங்களாக மாநகராட்சி ஊழியர்கள் மேற்கண்ட வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று, வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யாரேனுக்கும் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என விசாரித்து, அவர்களது விவரங்களை பதிவேட்டில் குறிப்பிட்டு செல்கின்றனர். மேலும் இப்பகுதி இளைஞர்கள் மஞ்சள், வேப்பிலை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து அப்பகுதி முழுவதும் மினி வேன் மூலம் எடுத்து சென்று தெளித்து வருகின்றனர்.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பனையூர் எம்ஜிஆர் தெருவில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இப்பகுதியில் முழுவதும் சுகாதாரதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மண்டலத்தில் 126 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 49 பேர் 28 நாட்களை  கடந்து விட்டனர், என்பது குறிப்பிடத்தக்கது. ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி  அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளை விசாரித்து, முறையான அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர். தேவையில்லாமல்  பைக்கில் உலா வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல்  செய்து வருகின்றனர். போலீசார் பிரதான சாலையில் இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்புற சாலை வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர். எனவே, இதை கட்டுப்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Motorists ,roads ,ECR ,OMR , Motorists,inner roads,restrictions, ECR and OMR
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு