×

ஊரடங்கால் பஸ் வசதியில்லாமல் விபரீதம் திருப்புவனத்தில் பசியால் முதியவர் சாவு: உணவு, தண்ணீரின்றி பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்த சோகம்

திருப்புவனம்: ஊரடங்கு எதிரொலியாக போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், உணவுக்கு வழியின்றி பஸ் ஸ்டாப்பிலேயே தாகத்துடனும், பசியுடனும் கிடந்து தவித்து வந்த முதியவர் பரிதாபமாக இறந்த சம்பவம் திருப்புவனம் அருகே பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலையில், நகருக்குள் ரோட்டில் கிடப்போர் மீட்கப்பட்டு உள்ளாட்சி நிர்வாகங்களுடன், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல்வேறு கிராமப்பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளிலும் சிக்கிக் கொண்டவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் ரோட்டிலேயே கிடந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சிக்கிக் கொண்டார். திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இந்த முதியவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல வழியின்றியும், முதுமை காரணமாக நடக்க முடியாமலும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள சக்குடி விலக்கு என்ற இடத்தின் பஸ் நிறுத்த நிழற்குடையிலேயே அயர்ந்து படுத்து விட்டார். ஊரடங்கு காரணமாக இந்தப்பகுதிக்கு பஸ் ஏற யாரும் வராத நிலையில், பகல், இரவென பசியோடு வெயிலிலும், குளிரிலும் தவித்தபடி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இங்கேயே கிடந்துள்ளார். பக்கத்து கிராமத்துக்கும் அவரால் போகமுடியாததால் யாருக்கும் தெரியாமல் போனது.

பசி, தாகத்தால் வாடிய முதியவர் நிழற்குடையில் படுத்தபடியே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை அந்த வழியாக டூவீலரில் சென்ற ஒருவர், முதியவர் இறந்து கிடப்பதைக் கண்டு, திருப்புவனம் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் சென்று உடலைக் கைப்பற்றினர். முதல்நாள் இரவே அவர் இறந்திருந்தது தெரிந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘தென்மாவட்டத்தின் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவராக தெரிகிறது. முதுமையால் அப்படியே பஸ் நிறுத்த நிழற்குடையிலேயே கிடந்து இறந்துள்ளார். குடும்ப வேலையாக வந்தவர், போக்குவரத்து இல்லாததால் சிக்கிக் கொண்டிருக்கலாம். இவரது படத்தை பல்வேறு காவல்நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.  ஊரடங்கால், நான்கு வழிச்சாலையில் உள்ள பஸ்நிறுத்த நிழற்குடையில், உணவு,  தண்ணீரின்றி பல நாட்கள் இரவு, பகலாக கிடந்து, கிராமத்து முதியவர் உயிர் விட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : hunger strike ,accident , Elderly man,dies, hunger strike
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...