×

ஊரடங்கு முடியும் வரை கடன் தவணை செலுத்த சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்கு விலக்கு கோரி வழக்கு: ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:   சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் கோவரதன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கோழிப்பண்ணை தொழில் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக வருகிற 14ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால், தொழில் நிறுவனங்கள் வருமானம் எதுவும் இல்லாமல் உள்ளது. பல நிறுவனங்கள் தொழில் கடன் வாங்கி அதற்குரிய தவணை தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்தன.  திடீரென தொழில் ஸ்தம்பித்து விட்டதால், அவர்களால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை கடன் தவணை தொகையை செலுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.  இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலித்து, கடன் தொகையை செலுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோருக்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags : RBI ,Supreme Court ,companies , Curfew, Reserve Bank, Notices, High Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...