×

தமிழகத்துக்கு வரவேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவி அமெரிக்கா சென்றதா?

சென்னை: மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்துக்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கொரேனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்வது குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் 19 பரிசோதனை கூடங்கள் இருந்தாலும், ஒரு நாளைக்கு 600 பேர் வரை மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்போது வரை 8,324 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டிய கருவிகள் போதிய அளவு இல்லாத நிலையில், கொரோனோ பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ெகாரோனா அறிகுறி இருந்தால் கூட அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு கூறி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு முற்றிய பிறகே பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்பேரில், 4 லட்சம் கிட் வாங்கப்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட் சீனாவில் இருந்து தமிழகம் வருவதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென மத்திய அரசு ரேபிட் டெஸ்ட் கருவியை மாநிலங்கள் நேரடியாக வாங்க தடை விதித்தது. இதைதொடர்ந்து மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவர்கள் வாங்கும் கருவிகளில்தான் தமிழகத்துக்கு பிரித்து தரப்படும் என்றும், தற்போது தமிழகத்துக்கு வரும் கருவிகள் கூட நாங்கள்தான் மாநிலங்களுக்கு பிரித்து தருவோம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் மேலும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே தமிழகத்துக்கு வர வேண்டிய கருவிகளை சீன ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்துக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்று குறித்த பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டோரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவி வந்தால்தான் பரிசோதனை செய்ய முடியும். இந்த சூழ்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : America , Corena, Tamil Nadu, Rapid Test Tool, USA
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...