×

ஒரு தலைமுறையின் சிறந்த வீரர் டோனி உடனே ஓய்வு பெற நெருக்கடி கொடுக்காதீர்கள்... நாசர் உசேன் வேண்டுகோள்

லண்டன்: ஒரு தலைமுறைக்கு கிடைத்த மிகச் சிறந்த வீரர் எம்.எஸ்.டோனி. அவரை உடனடியாக ஓய்வு பெற நெருக்கடி கொடுக்காதீர்கள் என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய அணி 2 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல காரணமாக இருந்தவர் டோனி. வெற்றிகரமான கேப்டன், அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பராக முத்திரை பதித்து மகத்தான சாதனை வீரராக விளங்கும் டோனி, கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்து வரும் அவர், ஐபிஎல் 2020 சீசனுக்காக முழு வீச்சில் தயாராகி வந்தார்.

துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப்போவதால், மீண்டும் டோனியின் அதிரடி ஆட்டதை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் டோனி ஓய்வு பெற வேண்டும் என்றும் சில கிரிக்கெட் பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஐசிசி டி20 உலக கோப்பையில் டோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது: டோனி ஓய்வு பெற்று சென்றுவிட்டால் அத்துடன் கதை முடிந்தது. அதன் பிறகு அவரை மீண்டும் அழைத்து வருவது என்பது நடக்காத காரியம். தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய அபூர்வமான வீரர்களில் டோனியும் ஒருவர். இது போன்ற வீரர்களை அவர்கள் விளையாடும்போதே கொண்டாட வேண்டும்.

அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று நெருக்கடி கொடுக்காதீர்கள். டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவினரின் வேலை. அவர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ... அவர்கள் தான் விளையாடப் போகிறார்கள். எனவே, மற்றவர்கள் இதில் தலையிட வேண்டாம். என்னைப் பொறுத்த வரை இந்திய அணிக்காகப் பங்களிக்க அவரிடம் இன்னும் நிறைய திறமை எஞ்சியுள்ளது என்றே நினைக்கிறேன்.
இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

Tags : Tony ,Nasser Hussein , Dhoni, Nasser Usain
× RELATED கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தி டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை