×

இருப்பதை பத்திரப்படுத்த ஆடிட்டர்களை நாடி ஓடும் அமைச்சர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஓட்டு எண்ணிக்கை நாள் நெருங்க, நெருங்க இலை கட்சியின் அமைச்சர்களுக்கு பிபி எகிறுதாமே….’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாம. ‘‘யார் தலை தப்பும் என்ற பயம் தான். ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர் பதவி எப்போது காலியாகும் என்ற பயம் தான் இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் தப்பிப் பிழைப்ேபாமா, அரசியல் எதிர்காலம் நிலைக்குமா என்ற அச்சம் தான் பலரையும் ஆட்டிப் படைக்கிறதாம். பல அமைச்சர்கள் ஆடிட்டர்கள் உதவியை நாடி ‘‘இருப்பதை’’ பத்திரப்படுத்த முயற்சிக்கின்றனராம். சிலர் யாகம், பூஜை, வழிபாடு என சுற்றுகின்றனராம். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத அந்த தென்மாவட்ட அமைச்சர் கோவில் கோவிலாக சுற்றி வருகிறாராம். சமீபத்தில் திருப்பதிக்கு விசிட் அடித்த அந்த அமைச்சர், அப்படியே திருச்செந்தூருக்கும் ஒரு எட்டு வைத்துள்ளார். என்ன தான் இருந்தாலும் திருச்செந்தூர் சூரசம்ஹார ஸ்தலம். உட்கட்சி எதிரிகளை வீழ்த்த இந்த ஸ்தலம் தான் சிறந்தது என்பதால் திருச்செந்தூர் வந்த அவர் சத்ரு சம்ஹார மூர்த்தியையும் வழிபட்டாராம். எல்லாம் மே 2ம் தேதியை மனதில் வைத்து தான். 2 முறை வெற்றி பெற்ற அண்ணன், தற்போது ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என நினைக்கிறார். அதற்காக தான் கோயில், கோயிலாக வலம் வருகிறார் என்கின்றனர் இலை கட்சியினர். அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் ஒரு பெண் அமைச்சரும் வழிபட்டுச் சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்துக்கு அனைவருமே தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கின்றனராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தொகுதி மாறி போட்டியிட்டவர் ரொம்ப நொத்து போய் கிடக்கிறாராமே.. என கேட்டார் பீட்டர் மாமா’’ ‘‘கடந்த தேர்தலில் ‘‘பட்டாசு நகர’’ தொகுதியில் போட்டியிட்டு வென்ற ‘‘அமைச்சரானவர்’’, இந்தமுறை தொகுதி மாறி போட்டியிட்டார். எனவே, பட்டாசு நகர தொகுதிக்கு நெருங்கிய வட்டாரத்தில் யாரை வேட்பாளராக போட்டியிட வைப்பது என்ற குழப்பத்தில் தவிச்சாராம்… அவர் கை காட்டின சிலரும் செலவு செய்ய யோசிச்சுருக்காங்க… கட்சி தலைமையிடம் பழைய தொகுதியிலும் கட்சியை வெற்றி பெற வைப்பேன் எனக் கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியாமல் போய் விடுமென பயந்து போன அமைச்சரானவர், கட்சியில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் சமாதானம் பேசி, அவரோட மனைவிக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கி கொடுத்தாராம். சீட்டு வாங்கியவரோ ஓரளவு வசதி படைத்தவராக இருந்தாலும், தேர்தலில் முழுமையாக செலவு பண்ண முடியாமல் திணறிட்டாராம். பணம் உதவி செய்ய யாருமே இல்லாததால், ஆசை ஆசையாக சமீபத்தில் கட்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை, பெருந்தொகைக்கு அடமானம் வைத்து வாங்கிய பணத்தைத்தான் தேர்தலுக்கு செலவிட்டாராம். இப்போது தொகுதி நிலவரம், கலவரமாக இருப்பதால், தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்கிற பயம் வேட்பாளருக்கு வந்து விட்டதாம். இப்போது தன்னைச் சந்திக்கும் தனது ஆதரவாளர்கள் அத்தனை பேரிடமும் அமைச்சரு போட்டியிடாம ஒதுங்குன சூட்சமம் தெரியாம நானா வந்து வலையில மாட்டிக்கிட்டேனே என்று புலம்பித் தவித்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததா பல லகரங்களை சுருட்டினதா பேச்சு அடிபடுதே..’’ என சந்தேகமாக கேட்டார் பீட்ட் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருது. இந்த வங்கியில ரொம்ப நாளா 4 எழுத்து பெயரை கொண்டவரு பணிபுரிஞ்சி வர்றாரு. இவர் வங்கியில குறுக்குவழியில பணம் எப்படி எடுக்குறது, போடுறதுன்னு பல வித்தைகளை தெரிஞ்சு வெச்சிருக்காராம். கொரோனா பாதிப்பால மகளிர் குழு மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடின்னு அறிவிச்சத தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டாராம், இந்த 4 எழுத்து பெயர் கொண்டவரு. கணக்குப் போட்டு மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததாக போலி கணக்கு எழுதி வெச்சு பல லட்சங்களை சுருட்டிட்டாராம். இந்த சுருட்டல் மேட்டர், வருடாந்திர ஆய்வுல கண்டுபிடிச்சுட்டாங்களாம். உடனே அந்த தொகையையும், 4 எழுத்துக்காரர் கட்டினாராம். அதேசமயம் அந்த வங்கியில பணிபுரிஞ்ச முன்னாள் அதிகாரிங்களும் இவர் மேல பல லஞ்ச புகார்களை அனுப்பியிருக்காங்க. இப்ப, தேர்தல் விதிமுறை அமல்ல இருக்குறதால, மே 2ம் தேதிக்கு அப்புறமா, இந்த விவகாரத்துல, தனக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகுதோன்னு தெரியலையேன்னு, இலவு காத்த கிளியாக கிடக்குறாராம் அந்த 4 எழுத்து பெயரைக்கொண்டவரு’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘புதுச்சேரியில் இப்போ புது மாதிரி லடாயாமே..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.  ‘‘புதுச்சேரி  மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான  பூர்வா கார்குக்கும் கவர்னர்  தமிழிசைக்கும் இடையே சமீப காலமாக அலுவலக ரீதியாக தொடர்பு சரியாக இல்லை.  காரணம் மாவட்ட கலெக்டர் என்பதால் தன்னிச்சையாக செயல்படுகிறார். மூத்த  அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கவில்லை. புதுச்சேரியில் வேகமெடுக்கும்  கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சரியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை  என்ற குற்றச்சாட்டு  நிலவி வருகிறது. . இதனால் கவர்னர் தமிழிசை,  கலெக்டரை நம்பாமல் சுகாதார அதிகாரி அருண் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை  அமல்படுத்தி வருகிறார்.  மருத்துவமனை உள்பட பல்வேறு பகுதிக்கு ஆய்வுக்கு  செல்லும் தமிழிசை, சுகாதார அதிகாரியை மட்டும் அழைத்து செல்கிறார். ராஜ்பவன்  மாளிகையில் இருந்து வரும் சுற்றறிக்கையில் கூட கலெக்டர் பெயர் வருவதில்லை.  சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு கலெக்டரை வேறு  பணிக்கு மாற்றி உத்தரவு வரும் என அதிகாரிகள் மட்டத்தில் பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.      …

The post இருப்பதை பத்திரப்படுத்த ஆடிட்டர்களை நாடி ஓடும் அமைச்சர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : PP ,Peter ,
× RELATED உடல் பருமன் குறைப்பு...