×

சுகாதாரத்துறை செயலாளர் பேட்டியளிக்கும் டிஎம்எஸ் வளாக ஊழியருக்கு கொரோனா: தொடர்புகளை கண்டறியும் பணி தீவிரம்

சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டியளிக்கும் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மருத்துவ துறை பணியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் தவிர்த்து அவர்களை பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய  சுகாதார திட்டம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல மருத்துவத்துறை சார்ந்த அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 வயதுள்ள இவர் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
கொரோனா தொடர்பான பல்வேறு பணிகள் இந்த அலுவலகத்தில்தான் நடைபெற்றுவருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தினசரி இந்த அலுவலகத்தில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இவருக்கு யாரிடம்  இருந்து தொற்று பரவியது என்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த டிஎம்எஸ் வளாகத்தில்தான் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தொடர்ந்து தினமும் மாலையில் பேட்டியளித்து வருகிறார். அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்தநிலையில், டிஎம்எஸ் வளாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : campus employee ,Corona , Secretary of Health, TMS, Staff, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...