×

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கர மோதல்; எல்லையில் பயங்கரவாத ஏவுதளம் அழிப்பு: வெடிகுண்டு சேமிப்பு கிடங்கு தகர்ப்பு, 5 பாக். வீரர்கள் பலி

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மோதலில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஏவுதளம் மற்றும் வெடிகுண்டு சேமிப்பு கிடங்கை இந்திய ராணுவம் தகர்த்துள்ளது. கொரோனா வைரசால் உலகமே கதிகலங்கி உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டப் பகுதியில் உள்ள கெரான் என்ற இடத்தில் பாகிஸ்தான் துருப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன், நீலம் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் முகாமிட்டு இருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 5 இந்திய வீரர்கள்  கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தரப்பில் சில வீரர்களும், பல பயங்கரவாதிகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கெரனில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்கள் நேற்று காலை நீலம் பள்ளத்தாக்கின் துதானியல் மற்றும் தேஜியன் பகுதிகளில் முகாமிட்டு இருந்தன. அப்போது பாகிஸ்தான் ராணுவம் இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு குழு கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி முன் நோக்கி வந்தது. அதிர்ச்சியடைந்த இந்திய துருப்புகள், ஊடுருவல் முயற்சிகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவம் மதியம் 12:30 மணியளவில் இந்திய துருப்புகள் மீது தாக்கல் நடத்த தொடங்கியது.

இந்திய எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பீரங்கி குண்டுகளை வீசியது. கிராமத்தில் ஒரு வீட்டை வெடிகுண்டு சேதப்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய வீரர்கள் தரப்பில் பீரங்கியை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தின் இரண்டு ஏவுதளங்கள் மற்றும் துட்னியாலில் உள்ள அதன் படைப்பிரிவு தலைமையகத்தை தகர்த்தினர். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் தங்கும் டிப்போக்களில் ஒன்றும் அழிக்கப்பட்டது. ஆத்முகத்துக்கும் துதானியலுக்கும் இடையில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம் ஏவுதளம் மற்றும் வெடிமருந்து சேமிப்பு கிடங்கு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் நான்கு முதல் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல் நேற்று மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவம் தரப்பில் 105 மிமீ ஃபீல்ட் துப்பாக்கி மற்றும் 155 மி.மீ போபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தியது. இந்தியா தரப்பில் உயிரிழப்பு ஏதும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நடந்த பதில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இந்திய ராணுவம் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ‘ட்ரோன்’ மூலம் பதிவு செய்யப்பட்டதாக  கூறப்படுகிறது. வீடியோவை இந்திய ராணுவத்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தானில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்கள் நடந்துள்ளன. மார்ச் முதல், ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் 450 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஏப்ரல் முதல் வாரத்தில் பாகிஸ்தான் 55 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அதே நேரத்தில், இது ஜனவரி மாதம் 367 முறை, பிப்ரவரியில் 366 முறை வரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Tags : Terror clash ,region ,Kubwara ,Jammu ,Kashmir ,border ,soldiers , Jammu - Kashmir, Kubwara region, Terrible conflict, 5 Pak. Soldiers, kills
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்