×

மேலூர் அருகே வயலிலேயே வாடி வதங்கும் கோழிக்கொண்டை பூக்கள்: பல லட்சம் வரை பாதிப்பு என விவசாயிகள் சோகம்

மேலூர்: மேலூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கோழிக்கொண்டை பூக்கள் ஊரடங்கால், தொழிலாளர்கள் வராததால் பறிக்காமல் வயலிலேயே விடப்பட்டுள்ளது. இதனால் இதனை விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி, நாவினிப்பட்டி பகுதிகளில் ஏராளமாக கோழிக்கொண்டை பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. மாலைகளின் இடையில் வைத்து அளவை கூட்டுவதற்காகவும், பூமாலையின் அழகை கூட்டுவதற்காகவும் இவை பயன்படுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவால் இப்பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் பூக்களை பறிக்காமல் விவசாயிகள் வயலிலேயே விட்டுள்ளனர். தற்போது இவை வாடி வதங்கி வயலிலேயே விழுந்து சேதமாகி வருகிறது.
 
இதுகுறித்து கூத்தப்பன்பட்டியை சேர்ந்த விவசாயி ஆனந்தகுமார் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு இந்த பூக்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். சீசன் உச்சத்திற்கு செல்லும்போது கிலோ ரூ.100 வரை விலை போகும். தற்போதைய ஊரடங்கால் இவற்றை பறிக்காமல் வயலிலேயே விட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. அரசு இது போன்று எளிதில் சேதமாகிவிடும் விவசாய பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை தேவைப்படும் பகுதிக்கு அனுப்பி வைத்தால் எங்களை போன்ற விவசாயிகள் பயன் பெறுவார்கள்’’ என்றார்.

‘மணக்காத’ மல்லி விவசாயம்: ‘மதுரை மல்லி’ என்ற பெருமைக்குரியதாக மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட பகுதிகளில் விளையும் மல்லிகைப்பூ போற்றப்படுகிறது. ஆனால் தற்போது மல்லிகை விவசாயிகள் பல்வேறு பகுதிகளிலும் பெரும் நஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ஊரடங்கால் தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு, பூக்களை பறித்து பூ சந்தைக்கு கொண்டு வர முடியாமலும், தங்கள் அருகாமை இடங்களில் உள்ள சந்தைகள் மூடப்பட்டிருப்பதாலும் விற்பனையின்றி வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி  அருகே கல்லுப்பட்டி பகுதியில் மல்லிகைப்பூ விவசாயம் நடந்து வருகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவால் மல்லிகைப்பூ செடியிலேயே வாடி வதங்கி  விடுகிறது. இதுகுறித்து கல்லுப்பட்டி பகுதி விவசாயி மாரி கூறும்போது, ‘‘சாதாரண நாட்களில் 40 கிலோவிற்கு மேல் பூக்கள் எடுத்து வருவோம். அப்போது பூக்கள் நல்ல விலைக்குப் போகும். தற்போது பூக்கள் எடுப்பதற்கு  ஆட்களும் கிடைக்காமல், விற்பனை செய்யவும் முடியாத நிலை இருக்கிறது. எனவே, செடியிலேயே அப்படியே விடும் நிலை இருக்கிறது. மேலும் வெயில் காலம் என்பதால் உரம், மருந்துகள்  போட வேண்டும். பூக்கள் விற்பனையே இல்லாதபோது இந்த செலவை எப்படி எதிர்கொள்வது? என்ன செய்வதென்றே தெரியாமல்  திகைத்து நிற்கிறோம்’’ என்றார்.

Tags : field ,Mallur Millennium , Flowers in Mallur, Kozhikode
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது