×

ராமேஸ்வரம் விடுதியில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிக்கு பரிசோதனை: புலனாய்வுத்துறையினர் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் ரகசியமாக தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலாப்பயணிக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய, மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதியில் தங்கும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் குறித்த விபரங்களை ராமேஸ்வரம் போலீசார், குடிவரவு செயல்பாடு கண்காணிப்புத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல், வெளிநாட்டவர் ஊடுருவலை தடுக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் பல ஆண்டுகளாக இந்த முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தங்கியிருந்த தகவல் வெளியானதால் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஜென்டன் டேனியல் சார்லஸ் (69), கடந்த பிப்.14ம் தேதி விமானம் மூலம் கேரள மாநிலம், கொச்சி வந்துள்ளார்.

பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கடந்த மார்ச் 17ம் தேதி ராமேஸ்வரம் வந்தவர் பின்னர், ஊரடங்கு அமலானதை தொடர்ந்து  விடுதியில் தங்கியுள்ளார். இதுபற்றி விடுதி உரிமையாளர் போலீசாருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜென்டன் டேனியல் சார்லஸ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு, நாடு திரும்ப முடியாமல் ராமேஸ்வரத்தில் தங்கியுள்ளதாக இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ் உத்தரவை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சார்லசுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

பின்னர் நேற்று கார் மூலம், சென்னையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு ஜென்டன் டேனியல் சார்லஸ் அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே அரசு உத்தரவை மீறி, சட்டத்திற்கு புறம்பாக தங்கும் விடுதி அறையில் வெளிநாட்டு நபர் தங்குவதற்கு அனுமதித்த விடுதி உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங் மீது ராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமேஸ்வரத்தில்  வெளிநாட்டு நபர்கள், அவர்களது நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் வெளிநாட்டவர் குடிவரவு செயல்பாடு கண்காணிப்புத்துறை அதிகாரிகள், இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்ததால்தான், இவர் குறித்த தகவல் தெரியவில்லை. ஊரடங்கு நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டவர் ரகசியமாக தங்கியிருந்தது குறித்து மத்திய, மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : tourist ,Swiss ,hotel ,investigators ,Examination ,Rameshwaram ,tourist stay , Rameswaram Hostel, Tourist, Experiment
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு