×

கொளுத்தும் வெயிலால் ராமநதி அணை வறண்டது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

கடையம்: கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தப்பேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது அக்.30ம் தேதி ராமநதி அணை நிரம்பியது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கோடை போல் வெயில் கொளுத்துவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது அணை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

அணைக்கு தண்ணீர் வரும் நீரோடைகளும் பாறைகளாக காட்சியளிக்கின்றன. இதனால் வரும் நாட்களில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீராதாரத்தை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலத்தில் அணை தூர்வாரப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது கொரோனாவால் நாடே முடங்கி கிடக்கிறது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 30 அடிக்கு மணலும், சகதியுமாக ஆக்கிரமித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Ramanathi Dam , The drizzle, the Ramanati Dam, dried up
× RELATED கொளுத்தும் வெயிலால் ராமநதி அணை...