×

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற அச்சத்தில் சூரத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள்!!!

சூரத் : ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற அச்சத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ள ஒடிசா மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உலகளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கின்றன. இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.வரும் செவ்வாய்க்கிழமையுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதால் இதை நீட்டிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார். கூட்டத்திற்கு பின் மோடி ஊரடங்கு குறித்த தனது முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  குஜராத் மாநிலம் சூரத்தில்  ஒடிசா மாநில தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று அச்சம் அடைந்த அவர்கள், நேற்று இரவு கூட்டமாக கூடி சொந்த ஊர் திரும்ப முயற்சித்துள்ளனர். காவல்துறையினர் தடுத்ததால் நள்ளிரவில் சாலைகளில் டயர்களை கொளுத்தியும் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கற்கள் வீசியும் சேதப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட 70 பேரை சூரத் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : state workers ,Surat ,Odisha , Curfew, Order, Surat, Violence, Orissa, State, Workers
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...