×

பவானி சுற்று வட்டாரத்தில் ஏரிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாகும் தர்பூசணி பழங்கள்

பவானி: கொரோனா தடை உத்தரவால் பவானியில் விளைந்த தர்பூசணிப் பழங்களை, வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் கிடைக்கும் விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதனால், தர்பூசணிப் பழங்கள் ஏரிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் தர்பூசணி மற்றும் முலாம்பழங்களை சாகுபடி செய்துள்ளனர். கோடைகால பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு நல்ல விலையை எதிர்பார்த்து விவசாயிகள் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்தனர். 55 நாட்களில் அறுவரை செய்யப்படும் தர்பூசணிப் பழங்கள் கோடை காலத்தில் பெரும் வரவேற்பு பெறும். ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், விளைச்சல் காலம் முடிந்து அறுவடைக் காலம் தொடங்கிய நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரவில்லை.

சில்லறை விற்பனை செய்யப்படும் கடைகளும் மூடப்பட்டன. இதனால், தர்பூசணி வியாபாரம் முற்றிலும் முடங்கியது. சாகுபடி செய்யப்பட்ட நிலத்திலேயே பழுத்து, அழுகும் நிலை ஏற்பட்ட போதிலும் அறுவடைக்கு செய்யப்படும் கூலிக்குக் கூட விற்பனையாகவில்லை. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்த விவசாயிகள், கேட்கும் விலைக்கு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மீன்களுக்கு உணவாக தர்பூசணிப் பழங்களைக் கொடுக்க முடிவு செய்தனர். மீன்களும் விரும்பி உண்டதால், காடுகளில் அழுகியும், காய்ந்தும் போகும் தர்பூசணிப் பழங்களை ஏரிகளில் வளர்க்கும் மீன்களுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர். ஒரு டன் பழங்கள், ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கூலிக்கு ரூ.2 ஆயிரம் செலவிட்டு அறுவடை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, பவானி மூன்ரோட்டைச் சேர்ந்த விவசாயி சதீஷ் கூறுகையில்,தாளகுளம் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு தர்பூசணிப் பழங்களே உணவாகப் போடப்பட்டு வருகிறது. மீன்களும் பழங்களை விரும்புவதால், மீன்கள் வளர்ப்போர் குறைந்த விலையில் கிடைக்கும் தர்பூசணிப் பழங்களை வாங்கி போட ஆர்வம் காட்டுகின்றனர். அழுகி வீணாகும் பழங்களை, கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்யவே விவசாயிகளும் விரும்புகின்றனர்’ என்றார்.

Tags : circuit ,lakes ,Bhavani , Bhavani, fish, watermelon fruits
× RELATED ஊட்டி வருகை தரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சர்க்கியூட் பேருந்து சேவை