×

கொரோனாவை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்; ஆர்டர் செய்த 4 லட்சம் கிட் தமிழகம் வர தாமதம்; அமெரிக்காவிற்கு சீனா அனுப்பியதாக தகவல்

சென்னை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதித்தவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றை  கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்நோய் தொற்றை கட்டுப்படுத்துவது என்பது ஒரு சவாலான பணி.யாருக்கு இந்த தொற்று  இருக்கிறது என்பதை கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மற்றவர்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்த முடியும்.  ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளன.  இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள்  ஒன்றுக்கு 700 டெஸ்ட்கள் வரை மட்டுமே எடுக்க முடிகிறது.

அதிலும் பரிசோதனை முடிவுகள் தெரிய காலதாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துவதில் கடினமான நிலை உள்ளது.  சீனாவில், இந்நோய் தொற்றுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்ததால் மட்டுமே இந்த நோய் தொற்றை உடனடியாக கட்டுப்படுத்த முடிந்ததாக  கூறப்படுகிறது. இதற்காக 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி மூலம்  பரிசோதனை செய்யும் போது மிக வேகமாக கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த கருவிகளை  தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், துரித சோதனைக் கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) வாங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தால் கருவிகள் தமிழகத்திற்கு வர தாமதம்  ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சீன ஏற்றுமதியாளர் இன்னும் துரித சோதனை கருவிகளை அனுப்பவில்லை. கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பாமல்  அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிவிட்டது. முதல்வர் அறிவித்து 3 நாட்கள் ஆகியும் துரித பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்து சேரவில்லை. 50,000  கருவிகள் உடனே வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருந்தார். 10 லட்சம் துரித சோதனை கருவிகள் வாங்குவதாக மத்திய  அரசும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் தான் கிட்டுகள் திரும்ப கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும்.


Tags : Corona ,China ,Tamil Nadu ,US , Rapid Test Kit to detect Corona; 4 lakhs ordered to delay arrival in Tamil Nadu China sent to US
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...