மருத்துவர் என காரில் ஸ்டிக்கருடன் வந்தவர் காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய ஓட்டல் அதிபர் தப்பியோட்டம்: போலீஸ் தேடுகிறது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மருத்துவர் என காரில் ஸ்டிக்கர் ஒட்டி காதலியை பார்க்க வந்த போது தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய ஓட்டல் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா(37). தனது கணவரை பிரிந்த அமுதா, மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ஓட்டல் அதிபர் அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே அமுதா மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அவர், அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து, சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தலைஞாயிறு வந்து அமுதா வீட்டில் தங்கி உள்ளார்.

தகவல் அறிந்த சுகாதார துறையினர் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் மாலை அமுதா வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அப்துல்அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால் தனிமைபடுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் அப்துல்அகமது நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரது காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது அப்துல் அகமதுமைதீன் தப்பியோடியது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். தப்பியோடிய அப்துல் அகமது மைதீனுக்கு, மலேசியாவில் 4 ஓட்டல்களும், ராமநாதபுரத்தில் 5 ஓட்டல்களும் உள்ளதாகவும், இவருக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>