×

இந்தியாவிலேயே முதன்முறை குணமானவர் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து சிகிச்சை: கேரளாவுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

திருவனந்தபுரம்: கொரோனாவால்  பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை  பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சைக்கு  இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே  கேரளாவில்தான் முதலில் கொரோனா நோய் அதிகம் பரவியது. தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக, தற்போது பாதிப்பு  கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக  கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு இந்திய  மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய்க்கு எதிரான எதிர்ப்பு திரவம் இருக்கும். பிளாஸ்மா எனப்படும் அதை  பிரித்தெடுத்து அதை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

இது, ‘பிளாஸ்மா தெரபி’ சிகிச்சை என அழைக்கப்படுகிறது. இந்த முறை 100 சதவீதம்  வெற்றியடையும் என உறுதியாக கூற முடியாவிட்டாலும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளில் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 1918, 1957 ஆகிய ஆண்டுகளில்  புளூ, சார்ஸ், எச்1 என்1 பன்றிக்காய்ச்சல், எபோலா ஆகிய வைரஸ் நோய்களுக்கு  இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்த சிகிச்சை முறையை கொண்டு  வர வேண்டும் என முதன் முதலில் கேரளாவில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி  கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறை  குறித்து முழு அறிக்கையும் திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவ  மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை  பரிசீலித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சை நடத்த  கேரளாவுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி பிளாஸ்மா சிகிச்சை  விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல், கியூபாவில் பயன்படுத்தப்படும்  ‘இன்டர்பெரோன் அல்பா-2பி’ என்ற மருந்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பு  குறித்த ஆய்வு மற்றும் நோயின் சமூக பரவலை கட்டுப்படுத்தும் ஆய்வுக்கும்  கேரளாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதுவும் இந்தியாவிலேயே முதல்முறை என்பது  குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சி கழக இயக்குனர் ஆஷா கிஷோர் கூறுகையில், ‘‘பிளாஸ்மா சிகிச்சை நடத்த ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் அனுமதி மட்டுமே கிடைக்க வேண்டும். கொரோனா பாதித்த பின்னர் குணமாகி 14 நாட்கள் நோய் அறிகுறி இல்லாதவர்கள், அதன் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய் இல்லை என்று முடிவு வந்தவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம் சேகரிக்கப்படும். திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா மருத்துவமனைதான் இந்த பரிசோதனையின் தலைமையகமாக செயல்படும். கேரளாவில் மேலும் 5 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.

அடுத்தடுத்து மர்மச் சாவு 5 பூனைக்கு கொரோனா?
காசர்கோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுற்றி வந்த 5 பூனைகளை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பிடித்து தனித்தனி அறைகளில்  பராமரித்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் தாய் பூனை இறந்தது. அதன் 2  குட்டிகள் உட்பட மற்ற 4 பூனைகளும் அடுத்தடுத்து இறந்தன. இதனால் அவற்றுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று அச்சத்தில், அதன் உடல்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கேரளாவில்364 பேர் பாதிப்பு
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கேரளாவில் இன்று (நேற்று) மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 364 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதில், 124 பேர் குணமாகி விட்டனர்,’ என்று கூறியுள்ளார்.

₹3 கோடி நிதி அளித்த லாரன்சுக்கு பாராட்டு
மறைந்த பழம் பெரும் மலையாள நடிகர் திலகனின் மகனும், நடிகருமான ஷம்மி திலகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பிரபல நடிகர் லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி கொடுத்துள்ளார். இது மிகப்பெரிய விஷயம். இதன்மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் சூப்பர் ஸ்டார்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்து இருப்பார்கள்,’ என்று கூறியுள்ளார்.


Tags : ICMR ,India , India, Kerala, ICMR, Corona
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...