×

முடக்கத்தை நீட்டிக்கலாமா? வேண்டாமா? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: ஓரிரு நாட்களில் இறுதி முடிவு

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் முடக்கத்தை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு, ஓரிரு நாட்களில் இது பற்றிய இறுதி முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை. குறிப்பாக, ‘சமூக தொற்று’ எனப்படும் அபாயகரமான 3ம் நிலையை நாடு எட்டிக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதோடு, மக்களின் விருப்பத்துக்காக முடக்கத்தை தளர்த்தினால், மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த முடக்கத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.  நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் கடந்த 8ம் தேதி காணொளி காட்சி மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். அதில், ‘முடக்கத்தை ஒட்டு மொத்தமாக நீக்க முடியாது. மக்கள் ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்றுவதில் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது,’ என அவர் தெளிவாக கூறிவிட்டார்.  இந்நிலையில், முடக்கத்தை இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிசா அரசு தன்னிச்சையாக நேற்று முன்தினம் அறிவித்து விட்டது. மேலும், முடக்கத்தை வரும் 14ம் தேதிக்குப்பின் நீட்டிப்பதா? வேண்டாமா? அல்லது பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் முடக்கத்தை அமல்படுத்தி விட்டு, மற்ற பகுதிகளில் தளர்த்தலாம் என்ற யோசனை கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி கடந்த மாதம் 20ம் தேதியும், கடந்த 2ம் தேதியும் இருமுறை ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பலி 199 ஆக உயர்ந்துள்ளது, பாதிப்பு 6 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, உயர்நிலைக் குழு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 916 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ேமலும், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் முழு கவச உடை உற்பத்தியை அதிகரிப்பது, மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வது, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சொசைட்டி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நலத் திட்டங்களில் உள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏசு கிறிஸ்துவை நினைக்க வேண்டும்
புனித வெள்ளியை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ஏசு கிறிஸ்து மற்றவர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரது தைரியம், நேர்மை, நீதி ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்நாளில் ஏசு கிறிஸ்துவின் புனித சேவையை நாம் நினைத்து பார்க்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

‘மேலும் 21 நாள் முடக்கம் தேவை’
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் நேற்று டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பை குறைக்க மேலும் 21 நாள் முடக்கம் அவசியம்,’’ என்றார். இதன்மூலம், முடக்கத்தை மத்திய அரசு நீட்டிக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.

மேலும் விலக்கு தரலாமா? மத்திய உள்துறை கடிதம்
மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தும் அதே நேரம், 21 நாள் முடக்கத்தின் நிலவரம் பற்றி அனைத்து மாநிலங்களிடமும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கருத்து கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.  இது தொடர்பாக அது அனுப்பியுள்ள கடிதத்தில், முடக்கத்தை அமல்படுத்துவதற்காக இதுவரை மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்துள்ளது. மேலும், முடக்கத்தில் இருந்து மேலும் சில துறை ஊழியர்களுக்கும், சேவைகளுக்கும் விலக்கு அளிக்கலாமா என கருத்து கேட்டுள்ளது. இதற்கு பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் அனுப்பியுள்ள பதிலில், கிராமப்புறங்களில் மட்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : state chiefs , State Chief Ministers, Prime Minister Modi, Corona
× RELATED 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்...