×

தமிழகம் முழுவதும் ஊரடங்கு எதிரொலியாக சீசன் விளைபொருட்களை அறுவடை செய்வதில் சிக்கல்: பொருளாதார முடக்கத்தில் விவசாயிகள் சிக்கும் அபாயம்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும், கோடை காலத்தில் விளை பொருட்களை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவால், பெரும்பாலான தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. தொழில் துறைகள் முடங்கினாலும், இயல்பு நிலை திரும்பிய பின், உடனடியாக உற்பத்தியை துவங்க முடியும். ஆனால், ஆண்டின் கோடை பருவத்தில் மட்டுமே நடக்க கூடிய சில தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. மாம்பழம், பலாப்பழம், புளி, தர்பூசணி, முலாம்பழம் ஆகியவை ஆண்டில் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் உச்சக்கட்ட சீசனை எட்டும். இந்த சீசனில், விளைபொருட்களை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயாராக உள்ளன. அதை வாங்க வியாபாரிகள் தயாராக இருந்தாலும், விற்பதற்கு விவசாயிகள் தயாராக இருந்தாலும் விவசாய நிலத்தில் இருந்தும், குடோன்களில் இருந்தும் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வாகன போக்குவரத்து இல்லை.

மேலும் பொருட்களை வாங்கிச் ெசல்ல பொதுமக்களும், சிறு வியாபாரிகளின் வருகையும் குறைந்துவிட்டுள்ளது. இதனால் மொத்த மார்க்ெகட்டிற்கு வாங்கிச் செல்லும் மொத்த விற்பனை வியாபாரிகளும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் சீaசன் விளைபொருட்கள் மட்டுமில்லாமல் அனைத்து விவசாய விளைபொருட்களின் விலையும் குறைவாகவே இருக்கிறது. இவற்றை நம்பி, ஆண்டு முழுக்க பயிரிட்டு பராமரித்த விவசாயிகள், தோட்டங்களை முன்பணம் கொடுத்து குத்தகைக்கு பிடித்துள்ள வியாபாரிகள் செய்வது அறியாது பொருளாதார நெருக்கடியில் சிக்கி திகைத்து நிற்கின்றனர். ஒட்டுமொத்தமாக நஷ்டமடைவதை தவிர்க்கும் வகையில், அத்தியாவசிய தொழில்கள் பட்டியலில் குறிப்பிட்ட விளைபொருட்கள் அறுவடை, போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

தட்டுப்பாடு  ஏற்படும்
கோடை சீசனில் விளையும் பொருட்களை அறுவடை செய்யாமல் விட்டால், விளைநிலத்திலேயே வீணாகி விடும். அப்படி நடந்தால், அடுத்த ஆண்டு வரை புளி, வாழை, மா ஆகியவை கிடைக்காது. ஏற்கனவே ஏக்கரில் அறுவடைக்கு தயாரான பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் அதே நிலத்திலேயே அழித்து உரமாக மாற்றி வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் பற்றாக்குறை அதிகரித்து பல மடங்கு விலை அதிகரிக்கும். மக்கள் பாதிக்கப்படுவர்.


Tags : Tamil Nadu ,downturn ,harvesting season , Tamil Nadu, Economic Freeze, Farmers, Corona
× RELATED சிற்றாறு தண்ணீர் குளங்களுக்கு...