×

தாராபுரம் அருகே தோட்டத்தில் 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: ஒருவர் கைது

தாராபுரம்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த 15 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபோதைக்கு அடிமையான குடிமகன்கள் போதைப்பொருட்களை தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் ஆள் நடமாட்டமில்லாத ஆற்றங்கரை பகுதிகள், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தாராபுரத்தை அடுத்த புதுப்பை கருப்பன்வலசு அருகே பாலசுப்ரமணி என்பவர் தனது தோட்டத்து வீட்டில் கள்ளச் சாராய ஊறல் தயார் செய்து வருவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கள்ளச் சாராயம் காய்ச்ச தயார் நிலையில் இருந்த 500 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர்.  மேலும் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்களையும், அடுப்பு, மண் பானைகளையும், விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (58) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : garden ,Tarapuram Tarapuram , Tarapuram, alcoholism, arrest
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...