×

வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் பல லட்சம் மதிப்பிலான நெல்லிக்காய் மண்ணில் கொட்டி புதைக்கும் அவலம்: உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் சோகம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பல லட்சம் மதிப்பிலான நெல்லிக்காய் மண்ணில் கொட்டி புதைக்கும் அவலம் நிலவுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆண்டிக்குழி கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்காய் மரம் வைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருடத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெல்லிக்காய் அறுவடைக்கு தயாராகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களுக்கு மொத்தமாக டன் கணக்கில் விற்பனை செய்து வருவது வழக்கம். ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து வாகனங்கள் செல்வதும், கடைகளில் விற்பனை செய்வது முற்றிலும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லிக்காய் விற்பனையும் அடியோடு முடங்கி உள்ளது.

இது குறித்து நெல்லிக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே நெல்லிக்காய் அறுவடை செய்யப்படும். தினந்தோறும் இரண்டு முதல் 3 டன் வரையில் நெல்லிக்காய் பறிக்கப்பட்டு அட்டை பெட்டிகளில் அடைத்து வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பனை செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எந்த வாகனங்களும் வந்து நெல்லிக்காய் வாங்கி செல்வதற்கு வருவது இல்லை. இதனால் தினந்தோறும் பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நெல்லிக்காய்களை மரத்தில் இருந்து பறிக்காமல் விடுவதால் அதிக பாரம் காரணமாக கிளைகள் உடைந்து கீழே விழுந்து விடுகிறது. நெல்லிக்காய்களும் பழுத்து கீழே விழுந்து வருகிறது. இதனை சேகரித்து மரங்களுக்கு அருகில் பள்ளம் தோண்டி கொட்டி மூடப்பட்டு வரும் அவல நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். நெல்லிக்காய் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு போதிய அனுமதி அளிக்க வேண்டும். நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : millions ,Ulundurpet ,traders ,farmers tragedy , Milk ,millions , rupees,buy,Ulundurpet
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...