×

சில ஆண்டுகளில் வைரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் : 2015ம் ஆண்டே எச்சரித்த பில்கேட்ஸ்

வாஷிங்டன் : இன்னும் சில ஆண்டுகளில் வைரஸ் நோய்க்கு ஒரு கோடி மக்கள் உயரிழக்க நேரிடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2015ல் எச்சரித்து இருந்தார். கடந்த 2014 முதல் 2016-ம்ஆண்டு வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் டெட் டாக் நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அணு ஆயுதங்களைவிட கண்ணுக்கு தெரியாத வைரஸால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் வைரஸால் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. சக்திவாய்ந்த ஏவுகணைகளைவிட நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை. ஆனால் வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இப்போது வரை நாம் தயாராக இல்லை.

கடந்த 1918-ம் ஆண்டில் பரவிய புளூ வைரஸால், 263 நாட்களில் 3 கோடியே 33 லட்சத்து 65 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்தனர். தற்போது எபோலா வைரஸால் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காற்றில் பரவவில்லை என்பதாலேயே மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை. அடுத்த முறையும் இந்த அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும் என்று கூற முடியாது. எபோலா வைரஸைவிட அடுத்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும். இதை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும்.

இது ஒரு போரை போன்றது. இந்தப் போரில் வெற்றி பெறஅனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக ஏழை நாடுகளில் வலுவான சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். வைரஸை முறியடிக்கும் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். அனுபவம்வாய்ந்த, திறன்மிகுந்த மருத்துவர்கள் அடங்கிய படையை உருவாக்க வேண்டும். வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குசெல்ல அவர்களை எப்போதும்தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அந்த மருத்துவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ ராணுவத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.வைரஸை கண்டறியும் பரிசோதனை, வைரஸுக்கான மருந்து ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்ய வேண்டும். நமக்கு நேரம் போதுமானதாக இல்லை. அடுத்த வைரஸ் தாக்குதலுக்கு முன்பாக இப்போதே விழித்தெழ வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Billcats , Virus, disease, one crore, people, will, 2015, year, billcats
× RELATED மருந்து கண்டுபிடிக்க ஒரு...