×

கோயில் திருவிழாக்கள் கொரோனாவால் தடை ரூ.5 லட்சம் அக்னிச்சட்டிகள் தேக்கம்

* அருப்புக்கோட்டை மண்பாண்ட தொழிலாளர்கள் சோகம்
* அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை: ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருப்புக்கோட்டையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அக்னிச்சட்டி, உருவப்பொம்மைகள், அகல் விளக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் நஷ்டமடைந்துள்ள தங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன், ஆயிரங்கண் மாரியம்மன், தாயமங்கலம், கமுதி, முத்துமாரியம்மன், பாலையம்பட்டி, பந்தல்குடி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, கல்லூரணி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் பங்குனி மாத பொங்கல் விழா சிறப்பாக நடக்கும். இவ்விழாக்களில் அக்னிச்சட்டி, உருவப்பொம்மை, ஆயிரங்கண் பானைகளை பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்துவர்.இதை தயாரிக்கும் பணியில் அருப்புக்கோட்டை மணிநகரம் குலாளர் தெரு, பொன்னையா தெருவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபடும். கடந்த மாசி மாதம் முதல் அக்னிச்சட்டி, முளைப்பாரி சட்டி, உருவப்பொம்மைகள், அகல் விளக்குகள், கால்பாதம் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக விரதமிருந்து தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஒரு மாத காலமாக தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஏப். 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் கோயில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் அருப்புக்கோட்டையில் தயார் செய்யப்பட்ட அக்னிச்சட்டி, பொம்மை, அகல் விளக்கு என 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். தங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி கோவிந்தராஜ் கூறுகையில், ``தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பங்குனி பொங்கல் திருவிழாவும் ஒன்று. இதற்காக நேர்த்தி கடன் செலுத்துபவர்களுக்காக அக்னிச்சட்டி, பொம்மைகள் தயார் செய்யும் பணியில் ஒரு மாதத்திற்கு மேலாக இரவு, பகலாக ஈடுபட்டு வந்தோம். களிமண் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல், தற்போது மண் கிடைப்பதில் பல கெடுபிடி உள்ளது.

அதையெல்லாம் மீறி தொலைதூரங்களில் உள்ள கண்மாய்களில் இருந்து கரம்பை, செவல்மண் கொண்டு வந்து செய்யப்பட்ட மண்பாண்ட பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு காலரா நோய் வந்த போது கூட திருவிழாக்கள் நடத்தப்பட்டது. தற்போது திருவிழா நடைபெறாமல் இருப்பது வேதனையாக உள்ளது. நாங்கள் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : festivals ,Temple ,Corona Temple Festivals ,Corona , Temple, festivals, banned ,Corona
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை