புளியங்குடியில் யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னைமரங்கள் சேதம்

புளியங்குடி:  புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள விளைநிலங்களை யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகிறது.இதனால் விவசாயிகள்  வேதனையடைந்துள்ளனர்.புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது கடும் வறட்சி காரணமாக நீர் மற்றும் உணவு தேடி யானை கூட்டங்கள் மலைப்பகுதியில் இருந்து இறங்கி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானை கூட்டங்களை விளைநிலங்களில் புகாமல் தடுக்க விவசாயிகள், தோட்டங்களில் பட்டாசு வெடித்து காவல் காத்து வருகின்றனர்.இந்நிலையில் புளியங்குடி அருணாசல விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் முத்துப்பாண்டி(54), முருகராஜ்(43) ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி பீட் பகுதியில் உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் தற்போது வாழை, எலுமிச்சை சாகுபடி செய்திருந்தனர். தென்னை, பலா, மாமரங்களும் உள்ளன. யானைகள் விளைநிலங்களில் புகுவதை தடுக்கும் வகையில் நேற்றுமுன்தினம்  சகோதரர்கள் இருவரும் இரவு 10 மணி வரை தோட்டத்தில் பட்டாசு வெடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பிய நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் 5 யானைகள் குட்டியுடன் விளைநிலங்களில் புகுந்து அங்கிருந்த வாழை, தென்னை, எலுமிச்சை பயிர்களை சேதப்படுத்தியது. யானை கூட்டம் அங்கிருந்து அதிகாலையில் வெளியேறி சென்றன.

இந்நிலையில் நேற்று  காலை இருவரும் தோட்டத்திற்கு சென்றபோது யானை அட்டகாசம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் குலை தள்ளிய நிலையில் இருந்த 70க்கும் மேற்பட்ட வாழைகள், தென்னை குருத்துகள் மற்றும் பைப்லைனை யானைகள் சேதப்படுத்தி உள்ளன. சேத மதிப்பு ரூ.60 ஆயிரம் என கூறப்படுகிறது.தகவல் அறிந்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் வனசரகர் அசோக்குமார் மற்றும் வனக்காவலர்கள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இப்பகுதியில் யானைகள் தொடர்ந்து விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவதால் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>