×

கும்பகோணத்தில் இருந்து புதுவை ஜிப்மருக்கு புற்றுநோய் பாதித்த மனைவியை சைக்கிளில் ஏற்றிவந்து சேர்த்தார்: தொழிலாளியின் பாசப்போராட்டம்

புதுச்சேரி: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்(65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தார். ஆனால், கொரோனா வைரஸ் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. எப்படியாவது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட எண்ணிய அவர் தனது பழைய சைக்கிளிலேயே மனைவியை பின்னால் அமர வைத்து புறப்பட்டார். குடிக்க தண்ணீரும், உண்ண சாப்பாட்டு பொட்டலமும் மருத்துவ பைலுமாய் கூடுதல் சுமையையும் சுமந்தபடி சென்றார். கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு கிலோ மீட்டர் என்றுகூட அவருக்கு கணக்கு தெரியாது.

இருந்தாலும் சீர்காழி, கடலூர் வழியாக 120 கி.மீ தூரம் சைக்கிளை மிதித்தே புதுச்சேரிக்கு மறுநாள் காலையில் வந்து சேர்த்தார். வழியில் எத்தனையோ சிரமங்கள், தொல்லை ஏற்பட்டும் அவர் சளைக்கவில்லை. வேட்டியும், வெறும் துண்டும் மட்டும் போர்த்தியிருந்த அந்த எளிய தொழிலாளியை பார்த்த ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் மனம் இறங்கினர். மனைவியை உடனடியாக சேர்த்து ஹீமோதெரபி சிகிச்சை அளித்தனர். அறிவழகனுக்கு இலவசமாக உணவு வழங்கினர். 3 நாட்கள் மஞ்சுளாவுக்கு உரிய சிகிச்சை அளித்து விட்டு, ஜிப்மர் ஆம்புலன்சிலேயே இருவரையும் கும்பகோணத்தில் அவரது வீட்டில் இறக்கி விட்டனர்.


Tags : Kumbakonam ,Puthiya Jipmar ,Puthiya Jipmer , Kumbakonam, Zipmer, Cancer, Wife, Worker
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...