×

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்

அம்பை: ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிக்கும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் 900 குடும்பத்தை சேர்ந்த 2500 தோட்டத்தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதி தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடந்த 30ம் தேதி 3 மினி லாரிகளில் அனுப்பியது. மேலும் ரேஷனில் இலவச பொருட்களும், ரூ.1000 நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாஞ்சோலையில் எஸ்டேட் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி தொற்று நோய் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு 50 சதவீத பணியாளர்களை கொண்டு தேயிலை தோட்டத்தில் பணி மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு அவர்கள் பணிபுரியும் இடத்தில் கை கழுவ சோப் மற்றும் டிரம்களில் தண்ணீர் வைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிப்பது கண்காணிக்கப்பட்டு தேயிலை கொழுந்து பறிக்கும் பணி தொடங்கி உள்ளது.இதுகுறித்து தொழிற்சங்க  நிர்வாகி கூறுகையில், மாஞ்சோலை தனியார் எஸ்டேட்டில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட 4 கோட்டங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் ஆங்காங்கே சுமார் 5, 7 ஏக்கர் அளவாக பிரிக்கப்பட்டு நம்பர் இடப்பட்டு நூற்றுக்கணக்கான காடுகள் உள்ளது. ஒவ்வொரு காட்டிலும் தேயிலை செடிகளில் பருவத்திற்கேற்ப 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் சுழற்சி  முறையில் கொழுந்தை பறித்தாக வேண்டும்.

இல்லையேல் அதன் பருவம் முற்றி கொழுந்து இலையாகி பயனற்றதாகி விடும். அதன்பின் செடியை கவாத்து செய்து காடு சுத்தம் செய்து மீண்டும் பருவம் வர 3 மாதங்களை கடந்து விடும். இதனால் நிர்வாகத்திற்கு நஷ்டம் மற்றும் தொழிலாளிக்கு வேலையின்மை போன்ற பிரச்னைகள் எழும். எனவே இதை கருத்தில் கொண்டு நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுத்தம், சுகாதாரம் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்து மீண்டும் வேலைக்கு திரும்பி உள்ளோம், என்றார். உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதித்த சுய ஊரடங்கு உத்தரவு 21 நாட்களில் 15 நாட்கள் வீட்டில் முடங்கி கிடந்த 15 நாட்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.



Tags : tea plantation workers ,Manjolai , Although ,force, plantation,work
× RELATED இலங்கையில் தேயிலை தோட்ட...