×

ஊரடங்கு நேரத்திலும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் குட்கா பொருட்கள் கனஜோர் விற்பனை

ஸ்ரீபெரும்புதூர்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்திலும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் மட்டும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கனஜோரான விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஹான்ஸ், பான்பராக் உள்பட பல்வேறு குட்கா பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் உள்ளவர்கள் மட்டுமன்றி, கிராமங்களிலும் குட்கா பொருட்களின் போதைக்கு பலர் அடிமையாகியுள்ளனர்.இதனை பயன்படுத்தி கொண்டு, ஆந்திரா, கர்நாடகா உள்பட வடமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக குட்கா பொருட்களை கடத்தி வரும் சிலர், மொத்த வியாபாரிகளுக்கு சப்ளை செய்து, அதனை சிறியது முதல் பெரிய அளவிலான கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான சில்லறை கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சப்ளை செய்து, தற்போது அதனை பதுக்கி வைத்து கனஜோராக விற்பனை செய்கின்றனர்.

தற்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ளது. ஆனாலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தடை செய்யபட்டுள்ள குட்கா பொருட்களை மொத்த வியாபாரிகளிடம், குறைந்த விலைக்கு வாங்கும் சில்லறை வியாபாரிகள், ₹15 முதல், ₹20 விற்பனை செய்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால், ஹான்ஸ் ₹50க்கும், பான்பராக் போன்ற போதை பொருட்கள் ₹20, முதல் ₹30 வரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதுபற்றி போலீஸ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது போதைக்கு அடிமையாகி உள்ள பலர் பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். தற்போது ஹான்ஸ் எனப்படும் போதை பொருளை தண்ணீரில் காய்ச்சி அதனை குடித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே போலீசார், தடை செய்யபட்டுள்ள குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags : area ,Sriperumbudur , Sale , gutkha products , Sriperumbudur, area
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...