×

ஏரியில் மேய்ச்சலுக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி 20 மாடுகள் பலி: நாசமான நெல் மூட்டைகள்

வாலாஜாபாத்:  வாலாஜாபாத் ஒன்றியம் சூரமேனி குப்பம் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இதையொட்டி, 300க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இந்த மாடுகள் தென்னேரி ஏரியின் கடைசி பகுதியில் தினமும் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை, திடீரென சூறைக்காற்று வீசியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மழையில் நனைந்த மாடுகள் நான்கு திசைகளிலும் சிதறி ஓடின. இதில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் அந்தந்த வீடுகளுக்கு திரும்பின. 50க்கும் மேற்பட்ட மாடுகள் தென்னேரி ஏரியின் நீரில் நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்ட மாடுகள் எங்கு சென்றது என்பதுன தெரியவில்லை என தெரிகிறது. மாயமான மாடுகளை அதன் உரிமையாளர்கள் தேடி சென்றபோது, தென்னேரி ஏரியில் நீந்தி சென்ற 20க்கும் மேற்பட்ட மாடுகள், தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் எத்தனை மாடுகள் நீரில் மூழ்கின என்பது குறித்து நாளை (இன்று) தெரியும் என்றார்.
இதேபோல், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்களை அறுவடை செய்து தென்னேரி, அகரம், மஞ்சமேடு உள்பட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று பெய்த கனமழையால், கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும், கொட்டப்பட்டு இருந்த நெல்லும், நனைந்தன. இதை கண்டு விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். பின்னர், குவியலாக உள்ள நெல்லை தார்ப்பாய் போட்டு முடிந்த வரை மூடினர். ஆனாலும், மழைநீர் நெல்குவியல் பகுதிகளில் சூழ்ந்தது. மேலும், ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் நனைத்தன. காஞ்சிபுரத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 3 மணியளவில் மேகமூட்டம் சூழ்ந்து, திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் காந்தி ரோடு, காமராஜர் சாலையில் வைத்திருந்த சில பேனர்கள், விளம்பர போர்டுகள் பலத்த சூறைக்காற்றால் தூக்கி வீசப்பட்டன. 


Tags : lake , 20 cows,killed , paddy field
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு