×

தமிழகம் முழுவதும் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் பட்டியல்: சிஇஓக்கள் அனுப்பி வைக்க உத்தரவு ,..ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சி

வேலூர்: தமிழகத்தில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை தொடக்கக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவால் ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. கடந்த கல்வியாண்டு தொடக்கத்தில் 25 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் பட்டியலிடப்பட்டு அப்பள்ளிகளின் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். மூடுவிழா கண்ட பள்ளிகளின் கட்டிடங்கள் நூலகங்களாகவும் பிற பயன்பாட்டுக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழக அரசின் இச்செயலுக்கு அப்போதே ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி குரல்கள் எழுந்தன. இந்நிலையில், வரும் கல்வியாண்டிலும் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் புள்ளி விவரத்தை விரைந்து அனுப்ப வேண்டும் என்று கேட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில் ஒரு மாதிரி படிவமும் இணைக்கப்பட்டு அதில் பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை, அருகில் உள்ள பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்பச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.  இது 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும். அரசின் இந்த நடவடிக்கை அரசு பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு அதன் மூலம் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஏற்கனவே அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் பல நூறு பள்ளிகள் மாநிலத்தில் மூடுவிழா கண்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அதே நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அரசு பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாவதுடன், முறையான கல்வித்தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை முடித்து பணிக்காக காத்திருப்பவர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயரும். மேலும், தமிழக பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தவும் முடியும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Tags : schools ,CEOs ,Tamil Nadu ,Teacher Unions , Tamilnadu, 25 students, CEOs, Teacher Associations
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...