×

அரக்கோணத்தில் நடந்துசென்ற ஊழியரை விசாரிக்காமல் போலீசார் லத்தியால் தாக்குவதா? தூய்மை பணியாளர்கள் திடீர் மறியல்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே விசாரிக்காமல் லத்தியால் தாக்கிய போலீசாரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் முழுவதும் சுகாதாரத்துறையினர்,  தூய்மைப் பணியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை அரக்கோணம் சுவால்பேட்டை சாலையில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் நடந்து சென்றார். அவரை போலீசார் எந்த விசாரணையும் இன்றி தடுத்து நிறுத்தி லத்தியால் தாக்கி எச்சரித்தனராம்.  இதுகுறித்து தகவலறிந்த தூய்மை பணியாளர்கள் அங்கு திரண்டு திடீரென  சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக நகராட்சி ஆணையாளர் ராஜவிஜய காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது,  தூய்மை பணியாளர்கள் எங்கள் பணியை நாங்கள் வழக்கம்போல் செய்கிறோம். ஆனால், போலீசார் எந்த விசாரணையும் இன்றி லத்தியால் தாக்கிவிட்டு அதன்பிறகே விசாரிக்கின்றனர்’ என தெரிவித்தனர். இதையடுத்து ஆணையாளர், இன்ஸ்பெக்டரிடம், ‘இதுபோன்ற பிரச்னை வராமல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்.
அதற்கு இன்ஸ்பெக்டர், ‘தூய்மை பணியாளர்கள் சீருடை, அடையாள அட்டை வைத்திருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காது. தேவையின்றி வெளியில் நடமாடும் பொதுமக்களை தடுப்பது போலீசாருக்கு பெரும் பணியாக உள்ளது. அதுபோன்ற சமயத்தில் சில தவறுகள் ஏற்பட்டு விடுகிறது’ என்றார். இதையடுத்து, தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : palace ,Cleanup Staff , Arakkonam, employee, policeman, purity staff
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி